கரோனா நிவாரணம்: வீடுகளுக்கே சென்று விநியோகிக்க வேண்டும்!

கரோனா நிவாரணம்: வீடுகளுக்கே சென்று விநியோகிக்க வேண்டும்!
Updated on
1 min read

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,000 நிவாரணத் தொகையையும் உணவுப் பொருட்களையும் சுழற்சி முறையில் வழங்குவதற்குக் கூட்டுறவுத் துறை முடிவெடுத்திருப்பது நோய்த் தொற்று அச்சம் நிலவும் இந்நாட்களில் சரியான முடிவாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு வீட்டுக்கே சென்று டோக்கன் வழங்கி, குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளில் நிவாரணத்தையும் உணவுப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள அழைப்பது என்பது காதைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை. அதற்குப் பதிலாக நிவாரணத்தை வீடுகளுக்கே சென்று விநியோகித்துவிடலாம். அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்ல நியாய விலைக் கடை நிர்வாகிகள் உள்ளூர்த் தன்னார்வலர்க் குழுக்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், ஒருவரே பதிவேடுகளைப் பராமரிக்கவும் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் வேண்டியிருக்கிறது. தற்போது வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கும் வேலையையும் அவர்களிடம் ஒப்படைப்பது அவர்கள் மீது இரண்டு மடங்கு பணிச்சுமையை ஏற்றுகிறது. மேலும், மணிக்கு ஒரு தடவை உயர் அதிகாரிகளுக்குப் பணி நிலவரத்தைத் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது விநியோகத்தில் கால தாமதத்தை ஏற்படுத்தவும் கூடும்.

நிவாரணம், உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதற்குச் சான்றாகப் பயனாளிகளிடமிருந்து கையெழுத்து பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு வாய்ப்புள்ள நிலையில் ஒரு பதிவேட்டையும் பேனாவையும் தினமும் நூற்றுக்கணக்கானவர்களைப் பயன்படுத்தக் கோருவதும் சரியானதாக இருக்க முடியாது. கையெழுத்துக்குப் பதிலாக, விரல் ரேகைகளைப் பதிவுசெய்வது இன்னும் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. ஒரே மைப்பஞ்சையே பலரும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் அதுவும் நோய்த் தொற்றுக்கு வாய்ப்பாக இருக்கிறது. இது போன்ற தருணங்களில் அந்தந்தப் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்களின் சான்றளிப்பை விநியோகத்துக்கான சான்றாக ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட யோசனையை அரசு பரிசீலிக்கலாம்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து வகைக் குடும்ப அட்டைகளுக்கும் நிவாரணத் தொகை வழங்குவதையும் பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in