ஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்

ஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு தழுவியதாக முன்னெடுக்கப்படும் ஊரடங்குக்குத் தமிழகத்தில் மக்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர். இது மேலும் தீவிரமாவதற்கு, அரசின் திட்டங்களில் தெளிவு வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளை அணுகும் விதத்திலேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அறிவிப்பை வெளியிடுவதும், அதையொட்டி மக்களிடம் காவல் துறை கடுமை காட்டுவதும் மக்களை அலைக்கழிக்கும்.

ஒரு சிறுநகரில் சில கிமீ இடைவெளிக்குள் உள்ள மூன்று பெட்ரோல் நிலையங்களையும் ஒருசேர அனுமதிப்பதைக் காட்டிலும், சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையத்தைத் திறக்கச் செய்யலாம். அதேசமயம், ஒரு வாகனம் பழுதாகும்பட்சத்தில் அதைப் பழுது நீக்கும் ஒரு கடையேனும் அந்த ஊரில் அனுமதிக்கப்பட வேண்டும்; இப்படியான சங்கிலித் திட்டமிடல்தான் இன்று தேவைப்படுகிறது. உணவு, மருந்து மட்டும் அல்ல; துணிமணிகளும் சிகரெட்டும் மதுவும்கூட இணையச் சேவை மூலம் வீட்டிலேயே கிடைத்திட சீன அரசு ஏற்பாடுசெய்திருந்தது என்பதை நாம் இங்கு பாடமாகக் கொள்ளுதல் வேண்டும். காசநோயாளிகள் முதல் சிறுநீரக நோயாளிகள் வரை பல நூற்றுக்கணக்கானோர் குறித்த காலக்கெடுவில் மருந்துகளைத் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அரசு இன்னமும் அஞ்சல், கூரியர் சேவை தொடர்பில்கூட என்ன யோசனையைக் கொண்டிருக்கிறது என்று தெரியாத சூழல் துரதிர்ஷ்டவசமானது.

அவசியத் தேவைகளுக்காகச் சொந்த ஊர் திரும்புவோருக்காகச் சிறப்பு அனுமதி என்ற அரசின் முடிவு நல்லது. கோடை நெருங்கும் நிலையில் ஜனநெருக்கடி மிக்க நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சிரமங்களில் சிக்கும். நகரங்களிலிருந்து வெளியேற நினைப்பவர்களைக் கூடுமானவரை அனுமதிக்கலாம்; தேவையெனில், அவர்களுக்கு ஒரு பரிசோதனையும் நடத்திவிட்டு அனுப்பிவைக்கலாம்; ஊரில் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கலாம்.

கிராமங்களையும் நகரங்களையும் ஒன்றுபோல நடத்திட வேண்டியதில்லை. கிராமங்களில் விவசாயம் தடையின்றித் தொடர்ந்தால்தான் மக்களுக்குத் தடையின்றி உணவு கிடைக்கும். கிராமங்கள் இயல்பாகவே கலாச்சாரரீதியிலான ஊர்க் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருக்கின்றன. வெளியாட்கள் உள்ளே நுழைவதையும், புதியவர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதையும் அங்கே கட்டுப்படுத்திட முடியும். கிராமங்களை நிர்வகிக்க விசேஷமான அணுகுமுறையை ஊராட்சி அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்குவது தொடர்பில் அரசு யோசிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in