Published : 16 Mar 2020 09:13 AM
Last Updated : 16 Mar 2020 09:13 AM

ஜோதிராதித்ய சிந்தியா: காங்கிரஸ் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்!

காங்கிரஸ் கட்சியின் இளம் தளகர்த்தர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, கட்சித் தலைமை தன்னை அங்கீகரிக்க மறுக்கிறது என்ற கோபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார். சேர்ந்த கையோடு அவர் மாநிலங்களவை வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஆதரவாளர்களான இருபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களுடைய ராஜிநாமா கடிதங்களை ஆளுநருக்கும் பேரவைத் தலைவருக்கும் அனுப்பியுள்ளனர். ஆட்சிக்கு வந்து 15 மாதங்களே ஆன கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது.

ஜோதிராதித்யாவுக்கு எந்த முக்கியப் பதவியும் தராமல் தடுத்ததில் முதல்வர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. 2018 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்காக ஜோதிராதித்யா சுற்றிச்சுழன்று பிரச்சாரம் செய்திருந்தார். வெற்றிக்குப் பிறகு அவரை முதல்வர் கமல்நாத் விலக்கி வைத்தார். கட்சிக்குள் நடந்த கூட்டங்களிலும் கட்சி மேலிடத்திடமும் இதை ஜோதிராதித்யா வெளிப்படையாகப் பேசியும்கூட கட்சித் தலைமை தலையிடாமல் மெளனம் சாதித்தது. அது இப்போது விபரீதமாகிவிட்டது. எனினும், காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய கொள்கைகளைத் தூக்கிப்பிடித்த ஜோதிராதித்யாவுக்குத் திடீரென அவற்றையெல்லாம் எப்படி உதறித்தள்ள முடிந்திருக்கிறது என்பது புரியவில்லை. நாட்டுக்கு சேவை செய்ய காங்கிரஸில் தொடர்ந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதால் பாஜகவில் சேர்ந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிராதித்யாவின் பாட்டி விஜய ராஜே சிந்தியா, அத்தைகள் வசுந்தரா, யசோதரா ஆகியோர் பாரதிய ஜனசங்கத்திலும், பிறகு பாரதிய ஜனதாவிலும் முக்கியத் தலைவர்கள் ஆனார்கள். ஜோதிராதித்யாவின் தந்தை மாதவ ராவ் தொடக்கத்தில் ஜனசங்கத்தில் இருந்து பிறகு வாழ்நாள் இறுதி வரையில் காங்கிரஸ்காரராகவே தொடர்ந்தார். ஜோதிராதித்யாவை வரவேற்ற அத்தை யசோதரா, இதை சொந்த வீடு திரும்பும் நிகழ்ச்சி என்றார். ஜோதிராதித்யா விரும்பியபடி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைப்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது. ஆட்சியைப் பிடித்த மத்திய பிரதேசத்திலாவது அதைக் காப்பாற்றிக்கொள்ள கூடுதல் கவனம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடுமையான உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கும் சோனியா, கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ஏற்றிருக்கிறார். இது தற்காலிக ஏற்பாடுதான் என்றாலும் கட்சி கட்டுக்கோப்பாக இல்லை என்பதையே சிந்தியாவின் நடவடிக்கை மீண்டும் உணர்த்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பதவி கிடைக்காத மேலும் பலர் சிந்தியா வழியில் செல்ல முடிவெடுக்கலாம். காங்கிரஸ் கட்சிக்குள் முழு ஜனநாயகம் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டும். இளைஞர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். அமைப்புத் தேர்தல்களை முறையாகவும் உடனடியாகவும் நடத்த வேண்டும். பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றிகளிலிருந்து பாடம் படிக்க வேண்டும். மாநிலத் தலைவர்கள் செல்வாக்குடன் வளர இனிமேலாவது அனுமதிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x