

சென்னை குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியிருக்கிறது. குண்டுவெடிப்புக்குப் பின் வழக்கம்போல, நம்முடைய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பான விவாதங்கள் பெரிதாகியிருக்கின்றன.
இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில், பெரும் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் குடிமக்கள் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பு என்பது நம் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு சவாலான காரியம் என்பதை மறுப்பதற்கில்லை. நமக்குத் தேவையான கட்டமைப்புகளைப் பாதுகாப்புத் துறையினரிடம் கேட்டால், அவர்கள் தரும் பட்டியல் குவாஹாட்டி ரயிலைவிடவும் நீளமாக இருக்கும். பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு நவீன குற்றத்தடுப்பு முறைகளிலும் கருவிகளைக் கையாள்வதிலும் தரமான பயிற்சிகள் தரப்படுவதில்லை; அவர்களுக்குத் தேவையான நவீன கருவிகளும் ஆயுதங்களும் அவர்களிடம் கிடையாது; உளவுப் பிரிவில் சுமார் 33% இடங்கள் காலி; ரயில்வே துறையை எடுத்துக்கொண்டால், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ் படை ஆகிய இரண்டிலும் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது... நிச்சயம் இவையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவைதான். ஆனால், இல்லாதவை மட்டும்தான் உயிர்களைப் பறிக்கின்றனவா?
வடகிழக்கு மாநிலங்களில் மலைகளும் பெரும் காடுகளும் சூழ்ந்த ஆள் அரவமற்ற ரயில் பாதையில் குண்டுவெடித்திருந்தால், இந்த நியாயங்களைச் சொல்லலாம். இப்போது குண்டுவெடிப்பு நடந்திருப்பதோ நாட்டின் மிகப் பெரிய, 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் ரயில் நிலையங்களுள் ஒன்றில். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சகல காவல் நடவடிக்கைகளையும் கடந்துதான் குற்றவாளிகள் சென்றிருக்கிறார்கள். எனில், இப்படிப்பட்ட குற்றவாளிகளை மடக்க நம் காவல் துறையிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? காவல் துறை அளிக்கும் தகவல்களின்படி குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுபவரின் படம் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. ஆனால், பலன் இல்லை. காரணம், அந்த வீடியோ கருவியின், படத்தின் தரம் அப்படி. சென்னையில் மட்டுமல்ல; பெங்களூருவிலும் இதே கதைதான். ஒவ்வோர் ஆண்டும் கண்காணிப்பு கேமராக்களை வாங்குவதற்காகவும் பராமரிப்பதற்காகவும் ஏராளமான கோடிகளை அரசு ஒதுக்குகிறது. ஆனால், அவற்றின் பலன் இதுதான் என்றால், அவை என்ன பொம்மை கேமராக்களா? பாதுகாப்புத் துறையின் அசட்டையின் - ஊழலின் - வெளிப்பாடு இது. சின்ன உதாரணம் இது. எவ்வளவோ அடுக்கலாம்.
பயங்கரவாதச் செயல்களை ஒடுக்குவதில் அரசுக்கு அக்கறையும் திறமையும் இல்லை. நம் நாட்டில் அமைச்சர் ஒருவருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிப்பதில் செலுத்தும் அக்கறையில் ஒரு துளிகூட, ஆயிரம் பேர் பயணிக்கும் ஒரு ரயிலுக்கு அளிக்கப்படுவது இல்லை என்பதுதான் உண்மை. ரயில் நிலையங்களில் மட்டும் அல்ல; பொது இடங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. அரசாங்கம் உயிர்ப்போடு இயங்குகிறது என்றால், அது செயல்பாட்டில் தெரிய வேண்டும்; வெற்று வார்த்தைகளில் அல்ல!