

சூரிய ஒளியிலிருந்தும் காற்றாலைகளிலிருந்தும் மின்னாற்றலைத் தயாரிக்க ‘தேசிய புதுபிக்கத்தக்க ஆற்றல் சட்ட’ வரைவை மத்திய அரசு மக்களுடைய பார்வைக்கு வைத்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றலைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைப்பதில் இந்த வரைவு கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது. நிச்சயம் முக்கியமான ஒரு முயற்சி இது. அதேசமயம், வழக்கம்போல தொழில் நிறுவனங்கள்சார் / லாபம்சார் நடவடிக்கைகளுக்கு இது வழிவகுப்பது சங்கடத்தைத் தருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்குத் தூய்மையான ஆற்றல் பெற தேசிய நிதி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சட்டபூர்வ ஆதரவு இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், முக்கியமான பல பிரச்சினைகளைப் போகிறபோக்கில் கடந்து செல்கிறது. நியாயமான விலையில் நிலங்களைக் கையகப்படுத்த உதவுவது, திட்ட வளர்ச்சியில் உள்ளூர் மக்களையும் இணைத்துக்கொள்வது, இதுவரை மின்வசதியே பெறாத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினால் ஊக்குவிப்புத்தொகை தருவது போன்றவை குறித்து எதிர்கால வழிகாட்டுக் குறிப்புகளில் இடம்பெறும் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை, மின் வாரியங்கள் வாங்குவதைக் கட்டாயமாக்கும் பிரிவு இடம்பெற்றுள்ளது. ஆனால், மின்வாரியங்கள் தங்களுடைய பயன்பாட்டுக்கு இந்த மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும்கூட, உற்பத்தியாகும் மின்னாற்றலுக்குரிய பணம் தரப்பட வேண்டும் என்கிறது இந்த வரைவு. இது எப்படிச் சரியாகும்?
இந்த வரைவின்படி, 2022-க்குள் காற்றாலை, சூரிய ஒளி மூலம் 1,75,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க தேசிய இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அரசு இந்த இலக்கை எட்ட கடுமையாக உழைத்தாக வேண்டும். தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டுசெல்வதற்கான மின்பாதைப் பிரச்சினையும், மின்சாரத்தைத் தொடர்ந்து வாங்குவது பற்றிய வணிக உறுதியும் அவசியம். ஏழு மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டுசெல்வதற்கான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரூ.8,548 கோடியை ஒதுக்கியிருப்பது இந்த நோக்கிலானது.
2022-க்குள் இது நாடு முழுக்கப் பூர்த்தியாகிவிடுமா என்பது சந்தேகம் தான். மாநிலங்களின் மின்வாரியங்கள் அரசியல் நோக்கத்திலான நிர்வாகம் காரணமாக நிதி வளம் இல்லாமல் இருக்கின்றன. காற்றாலைகளும் சூரிய ஒளி மின்உற்பத்தி நிறுவனங்களும் தயாரிக்கும் மொத்த மின்சாரத்தையும் வாங்கிக்கொண்டு பணம் தரும் ஆற்றல் அவற்றிடம் இல்லை. ‘புதிய மின் சட்டம்’ தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களை அனுமதிக்கிறது. எனவே, இத்தகைய நிறுவனங்கள் தங்களுடைய மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்க வழியேற்படும். ஆனால், அந்த மின்சாரச் சட்டத்துக்குப் பல மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. காரணம் இல்லாமல் இல்லை; அரிய வளமான மின்சாரத்தை வெறும் பண்டம்போல மட்டுமே சந்தை நோக்கில் இந்தச் சட்டம் அணுகுகிறது. உதாரணமாக, மாநிலங்கள் மானியக் கட்டணத்திலும் இலவசமாகவும் அளித்துவரும் மின்சாரத்தை நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் புதிய மின்சாரச் சட்டம் அமலுக்கு வந்தால் உருவாகும். இது எப்படி முறையாகும்?
ஒருபுறம், சூழலை நாசமாக்காத மின் உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும். மறுபுறம், அதன் விநியோகத்தில் நமக்கு மனிதப் பார்வையும் வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கும் வயலுக்கும் செல்லும் மின்சாரத்தை ஒரே அளவுகோலால் அளக்க முடியாது!