Published : 28 Aug 2015 08:33 AM
Last Updated : 28 Aug 2015 08:33 AM

எதிரிகளை உள்ளுக்குள் உருவாக்காதீர்கள்!

இந்திய, பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே நடைபெறுவதாக இருந்த கூட்டம் நடைபெறாமலேயே போக நேர்ந்தது துரதிருஷ்டவசமானது. ரஷ்யாவின் உஃபா நகரில் இந்தியப் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் சந்தித்த பிறகு இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்திய எல்லைகள்மீது பாகிஸ்தான் சுடுவதும் அந்நாட்டு எல்லையிலிருந்து தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஊடுருவுவதும் தொடர்ந்த நிலையில்கூட இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்களில் உறுதியாக இருந்தது ஓரளவுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவே இருந்தது. ஆனால் காஷ்மீர் தவிர பிற விஷயங்கள் குறித்துப் பேச வேண்டியதில்லை என்ற இந்திய வெளியுறவுத் துறையின் நிலையை பாகிஸ்தான் ஏற்கவில்லை; அதேபோல, பாகிஸ்தான் தூதரை, காஷ்மீர் பிரிவினையைக் கோரும் தலைவர்கள் சந்திக்கத் தடை விதித்ததையும் இந்தியா ஆட்சேபித்ததையும் பாகிஸ்தான் விரும்பவில்லை. ஆக, பேச்சுவார்த்தைக்கு முன்பே இந்த முறை சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

உஃபா சந்திப்புக்குப் பிறகு கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் அமைதியும் மோதல்கள் நிறுத்தமும் நிலவுவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. இது நீடிக்க வேண்டும் என்றே இந்தியத் தரப்பில் விரும்பப்பட்டது. ஆனால், உஃபா சந்திப்பு நடந்த ஒரு வாரத்துக்கெல்லாம் அக்னூர் பகுதிமீது பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்தது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்த அப்பகுதி ராணுவத் தளபதியுடன் நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி தொலைபேசி மூலம் பேச நான்கு முறை முயற்சித்தும் அவர் அந்த அழைப்புக்குப் பதில் சொல்ல எதிர்முனைக்கு வரவேயில்லை என்று வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இருதரப்பிலும் ஒப்புக்கொண்ட வழிமுறைகளின்படிதான் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் மக்கள் வசிக்கும் பகுதி மீது பீரங்கியால் சுடும் பாகிஸ்தானிய ராணுவம் அதுகுறித்து ஆட்சேபம் தெரிவிக்க இந்திய எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி அழைக்கும்போது பதில் சொல்லக்கூட வருவதில்லை என்றால், இரு நாடுகளும் எப்படித் தங்களுடைய பிரச்சினைகளைப் பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்?

பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தவறுகளின் மீதே பயணிக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதத் தாக்குதல்களும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது. எவருமே அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனால், பாகிஸ்தான் தன்னுடைய பயங்கரவாத ஆதரவுச் செயல்களை முற்றாக நிறுத்தினால்தான் பேசுவோம் என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கிவந்தும்கூட பாகிஸ்தான் முரண்டுபிடிப்பது அசிங்கம். இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஆலோ சனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்களில் தேவையில் லாமல் எல்லாக் குப்பைகளையும் கொட்டி அள்ள முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளை எவருமே நியாயப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, பிறகு மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், எல்லைக்கு அப்பாலிருந்து ஆயுதங்களுடன் வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற பல சம்பவங்களுக்குப் பிறகும் பாகிஸ்தானுடன் சமரசம் பேசுவதால் என்ன பலன் என்று எல்லோருமே நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. அதிகாரபூர்வமாகவோ வேறு வகைகளிலோ இரு நாடுகளும் சந்தித்துப் பேசி தீர்வு காணவே முடியாதோ என்று நினைக்கும் அளவுக்குச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியத் தரப்பும் சில விஷயங்களை நாசூக்காகக் கையாண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஹுரியத் அமைப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனையை அளவுக்கு அதிகமாக நம் தரப்பு வலியுறுத்தியதாலேயே தேவையில்லாமல் அளவுக்கு அதிக முக்கியத்துவத்தை ஹுரியத் அமைப்புக்கு இந்தியத் தரப்பு கொடுத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. என்னதான் பிரிவினைவாதம் பேசினாலும் ஹுரியத் அமைப்பும் அதன் பிரதிநிதிகளும் இந்தியர்களே. இன்னும் சொல்லப்போனால், காஷ்மீர் விவகாரத்தை முற்றிலுமாக அவர்களைப் புறந்தள்ளிவிட்டு நாம் பேச முடியாது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேசலாம்; ஹுரியத்துடன் பேச முடியாதா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x