Published : 04 Mar 2020 07:50 AM
Last Updated : 04 Mar 2020 07:50 AM

கருத்தரிப்பு மையங்களுக்கான கட்டுப்பாடு நல்லது!

மத்திய அமைச்சரவை முதலில் வாடகைத் தாய் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தந்துவிட்டு இப்போது நவீன கருத்தரிப்புத் தொழில்நுட்ப ஒழுங்காற்று சட்ட முன்வடிவைக் கொண்டுவந்திருக்கிறது. இது முதலாவதாகவும் வாடகைத்தாய் சட்ட முன்வடிவு அடுத்ததாகவும் வந்திருக்க வேண்டும். இவ்விரு சட்ட முன்வடிவுகளுடன் கருக்கலைப்பை சட்டபூர்வமாக அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிப்பது, கருவில் இருப்பது ஆணா - பெண்ணா என்று முன்கூட்டியே ஸ்கேன்செய்து பார்ப்பதைத் தடைசெய்வது என்று இந்த நான்கும் மகப்பேறு உரிமைகள். ஏற்கெனவே நிறைவேறிய சட்டங்களுக்கும், இப்போது ஒப்புதல் பெற்றுள்ள சட்ட முன்வடிவுகளுக்கும் சமூக நலனில் உள்ள அக்கறைதான் காரணம். இது இப்படியே தொடர வேண்டும்.

சமீப காலமாக மருத்துவத் துறையின் புதிய கிளையாக நவீன கருத்தரிப்பு மையங்கள் விரிவடைந்துவருகின்றன. மாநிலங்கள்தோறும், மாவட்டங்கள் தோறும், நகரங்கள்தோறும் மற்றும் ஒரே நகரத்தின் வெவ்வேறு இடங்களில் என்று இந்த மையங்கள் திறக்கப்படுகின்றன. கருத்தரிக்கும் நிலையில் இல்லாதவர்களுக்கு உதவும் இப்படிப்பட்ட மையங்கள் வரவேற்புக்குரியவைதான். உடல் பரிசோதனை முறைகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களால், குழந்தையின்மைக்குக் காரணங்களைத் தெரிந்துகொண்டு குழந்தையைப் பெற மாற்று வழிகளைத் தேர்வுசெய்யும் மனப்பக்குவத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். சோதனைச் சாலைகளில் கருவை வளர்த்து மீண்டும் கருப்பையில் பதிக்கும் முறை தொடங்கி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது வரை பல முறைகள் கையாளப்படுகின்றன.

செயற்கை முறையில் கருத்தரிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. தொடக்கக் காலத்தில் இத்தகைய குழந்தைப் பிறப்புகள் குறித்து முறையான ஆவணப் பதிவுகள் இருந்ததில்லை. 1970-களின் இறுதியில் லூயி பிரௌன் என்ற குழந்தை செயற்கைமுறையில் பிறந்ததாக அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்கெல்லாம் கொல்கத்தாவைச் சேர்ந்த சுபாஷ் முகர்ஜி உலகின் இரண்டாவது செயற்கைமுறைக் குழந்தையாக கொல்கத்தாவில் பிறந்திருப்பதாக அறிவிக்கும் அளவுக்கு நாம் இதில் முன்னோடி. 2026-ல் இந்தத் துறையில் மட்டும் சுமார் ரூ.3,20,000 கோடி புரளும் என்று மதிப்பிட்டுள்ளனர். ஆசியாவிலேயே இந்தியா இத்துறையில் மூன்றாவதாக இருக்கிறது. செயற்கைமுறையில் குழந்தைகளைப் பிறக்க வைப்பதற்கு இந்தியாவில் செலவு குறைவு என்பதால் வெளிநாடுகளிலிருந்தும் படையெடுக்கின்றனர். இதில் சட்டம், சமூகம், நீதிநெறிகள் சார்ந்த சிக்கல்களும் அடங்கியுள்ளன.

செயற்கைமுறைக் கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்த, கண்காணிக்க, மையங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கூறும் விதிகளை உருவாக்க, அவை அமலாவதை உறுதி செய்ய தேசிய வாரியம், மாநில வாரியங்கள் அமைக்கப்பட சட்ட முன்வடிவு வழிசெய்கிறது. அத்துடன் தேசியப் பதிவகம், பதிவு ஆணையம் ஏற்படவும் வழிசெய்துள்ளது. விதிகளை மீறினால் வழக்கு தொடரவும் சிறைத்தண்டனை விதிக்கவும் முடியும் என்பது முக்கிய அம்சம். கருத்தரிப்பு மையங்கள் மூலம் மக்கள் சுரண்டப்படாமல் தடுக்க இந்த சட்ட முன்வடிவு நிச்சயம் உதவும். சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கத்தை அமலாக்கத்திலும் அதிகாரிகள் காட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x