

அறிவுத் திருவிழாவான புத்தகக்காட்சி தமிழகத்தில் சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்ற நிலை மாறி, இன்று அது தமிழகம் முழுக்கவும் விரிந்துகொண்டே செல்வது ஒரு நல்ல அறிகுறி. புத்தகக்காட்சியானது வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கானது என்ற நிலையும் மாறி, வாசிப்புக்கு வெளியே இருப்பவர்களையும் உள்ளிழுக்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் புதுப்புது அம்சங்களைச் சூட்டிக்கொள்கிறது. இந்த விஷயத்தில் அண்மையில் நடந்து முடிந்த நெல்லைப் புத்தகக்காட்சிக்கு அதை முன்னின்று நடத்திய மாவட்ட நிர்வாகம் சேர்த்திருக்கும் வண்ணங்கள் ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணம் ஆகின்றன.
முன்னதாக, ‘இன்றைய இளையோரிடம் வாசிப்பு இல்லை’ என்ற பொதுப் பேச்சுக்கு முடிவுகட்டும் வகையில், அவர்களை புத்தகக்காட்சிக்கு வரவழைக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விஷயத்தில் ஈரோடு புத்தகக்காட்சி ஏற்பாடுகளை அவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டிருந்தனர் என்று சொல்லலாம். மாவட்டத்திலுள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு இந்தப் புத்தகக்காட்சியில் பங்கேற்பதற்கான அழைப்பும் ஊக்கமும் சென்றிருந்ததோடு, அப்படி வரும் மாணவ - மாணவிகள் ஆர்வத்தோடு பங்கெடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட ‘தொடர் புத்தக வாசிப்பு’ நிகழ்ச்சியையும், விடிய விடிய 24 மணி நேர வாசிப்பு நிகழ்த்துவதற்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளையும் ஒரு முன்னுதாரணமாகச் சொல்லலாம். நிகழ்ச்சியைக் காட்டிலும் இதில் காட்டப்பட்ட அக்கறை கவனிக்கக் கூடியதாகிறது.
நெல்லைப் புத்தகக்காட்சியின் ஆக முக்கியமான சிறப்பம்சம் என்று அது தன் மண்ணின் படைப்பாளிகளைக் கொண்டாடியதைச் சொல்லலாம். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பாளிகளைப் பட்டியலிட்டு, அன்றாடம் அவர்களுடைய குடும்பத்தினரை மேடையில் ஏற்றி கௌரவித்தது மாவட்ட நிர்வாகம். எல்லோரையும் ஒரே நாளில் மேடையில் ஏற்றி கௌரவிக்கும் முறைக்கு மாற்றாக, ஒவ்வொரு நாளும் ஒருவர் அல்லது இருவர் என்ற வகையில் படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இப்படி கௌரவிக்கப்பட்ட படைப்பாளியின் வாழ்வையும் அவருடைய படைப்புச் சிறப்பையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புத்தகக்காட்சியின் புதிய முயற்சிகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்ததோடு, புத்தகக்காட்சியின் முக்கிய நிகழ்வுகள் அத்தனையிலும் பங்கெடுத்துக்கொண்டார். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக வாசிக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் கூடவே உட்கார்ந்து ஷில்பா புத்தகங்களை வாசித்ததும், புத்தகக்காட்சிக்கு அன்றாடம் வந்த ஒரு மூதாட்டியை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி அவர் கௌரவித்ததும், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் புத்தகங்கள் வாங்க அறிவுறுத்தியிருந்ததும் புத்தகக்காட்சியில் அவர் காட்டிய அக்கறைக்கான வெளிப்பாடுகள்.
தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் நெல்லை வந்து தங்கி எழுதுவதற்கேற்ப நெல்லையில் அரசு சார்பில் ஓர் எழுத்தாளர் உறைவிட முகாம் வளாகம் அமைக்க வேண்டும் என்று இந்தப் புத்தகக்காட்சியின்போது கோரினார் பேராசிரியரும் அறிவாளுமையுமான அ.ராமசாமி; பரிசீலிக்கக் கூடிய ஒரு வேண்டுகோள் இது. படைப்பாளிகளைப் போற்றும் ஒரு புதிய மரபு அரசு நிர்வாகத்தில் வளர்த்தெடுக்கப்பட நெல்லை வழிகாட்டட்டும்; தமிழகத்தின் ஏனைய பிராந்தியங்களுக்கும் இம்மரபு செழித்துப் பரவட்டும்!