

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 62 தொகுதிகளில் வென்றிருக்கிறது ஆஆக. இதற்கு நேரெதிராக பாஜக அங்கே தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மூன்று முறை டெல்லியில் ஆட்சி அமைத்த காங்கிரஸால் தற்போது ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சிசெய்துவரும் ஆஆக தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்றிருப்பதற்கு அந்தக் கட்சியின் நல்லாட்சிதான் காரணம். கட்சியின் தொடக்கத்திலிருந்து கலவையான ஒரு அரசியல் அணுகுமுறையை அர்விந்த் கேஜ்ரிவால் வளர்த்தெடுத்திருந்தார். அது பாஜகவின் மதப் பிரிவினைவாத அரசியலை எதிர்கொள்ளும் சக்திவாய்ந்த மருந்தைக் கொண்டிருந்தது. தரமான கல்வி, மருத்துவ வசதி, தண்ணீர் விநியோகம் ஆகியவற்றின் மூலம் டெல்லியின் ஏழை எளியோருக்கு ஆதரவாக கேஜ்ரிவாலின் ஆட்சி இருந்துவருகிறது. அவருக்கு வாக்களித்ததன் மூலம் அந்தப் புதுமையான அரசியலரின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாக, டெல்லி தேர்தல் முடிவுகள், அக்கறையுள்ள ஆட்சி நிர்வாகத்துக்கு ஊக்கம் கொடுத்திருக்கின்றன. நிர்வாகத்தில் திறமையுடன் செயல்பட்டுக்கொண்டே பாஜக கொடுத்த நெருக்கடிகளை அர்விந்த் கேஜ்ரிவால் தனக்கேயுரிய லாகவத்துடன் தவிர்த்தார். இப்படிச் செய்யும்போது, பொதுச் சேவைகள் தங்குதடையில்லாமல் நடைபெறுவதற்கான களமாக அரசியலை மாற்றினார். அதேசமயம், சமகாலத்தின் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தவிர்த்தார்.
டெல்லியைப் பொறுத்தவரை தங்களுக்கென்று ஒரு ஆட்சித் தத்துவம் ஏதும் இல்லாத பாஜக, தேர்தல் பிரச்சாரத்தின் தரத்தை மேலும் கீழிறக்கியது. போன தேர்தலைவிட சற்று அதிகமான இடங்களில் பாஜக வென்றிருக்கிறது. ஆக, டெல்லி தேர்தல் முடிவுகளை இந்துத்துவ அரசியலுக்கான பின்னடைவு என்று கருதினால், அது தவறான கருத்தாகவே இருக்கக்கூடும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு பாஜக அடைந்த தோல்விகளின் வரிசையில் டெல்லியும் அடங்கும் என்றாலும் அதன் வலிமை மிகுந்த எதிர்த்தரப்புக் கட்சியானது பாஜகவின் அரசியலை நேரடியாக எதிர்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆஆகவின் வெற்றியானது பாஜகவின் அரசியலைத் தோற்கடிப்பதில் இல்லை; அதைத் தவிர்ப்பதில்தான் அடங்கியிருக்கிறது. இருந்தும், டெல்லியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்வதற்கு ஒரு பாடம் உண்டு. தேசியக் கூச்சல்கள் மட்டுமே வெற்றியைத் தேடித்தருவதில்லை, குறிப்பாக, மாநிலத் தேர்தல்கள். அங்கு நல்ல நிர்வாகம் மட்டுமே வெற்றியைப் பரிசளிக்கும் என்பதே அந்தப் பாடம்.
தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் பாஜகவில் முணுமுணுப்பை ஏற்படுத்தக்கூடும்.. தங்கள் பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்களுடைய அரசியல் அணுகுமுறையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் ஆஆகவின் வழிமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதேபோல், காங்கிரஸும் தனது தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கே மாநிலரீதியில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைத் தேசியக் கட்சிகளுக்கு உணர்த்தியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் பாராட்டுக்குரியவர்!