Published : 17 Aug 2015 09:27 AM
Last Updated : 17 Aug 2015 09:27 AM

செயலற்றுப் போகலாமா நாடாளுமன்றம்?

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்பார்த்தபடியே, குறிப்பிடத்தக்க பணிகள் ஏதுமின்றி அமளிகளுடனேயே கூடிக் கலைந்திருக்கிறது. கூட்டத்தொடர் அதிகாரபூர்வமாக முடித்து வைக்கப்படாததால், செப்டம்பரில் மீண்டும் கூட்டப்படலாம் என்று ஊகமாகச் செய்திகள் வந்தாலும், “அத்தகைய முயற்சிகள் ஏதும் இல்லை” என்று மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆக, முடிந்தது முடிந்ததுதான்.

லலித் மோடி விவகாரமும், மத்தியப் பிரதேசத்தில் ‘வியாபம்’ முறைகேடும் முக்கியமானவை; ஆளும் பாஜக நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரங்கள் இவை. எனினும், “இந்த இரு முறைகேடுகளிலும் தொடர்புடைய சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தர ராஜே, சிவராஜ் சிங் சௌகான் மூவரும் பதவிநீக்கப்பட்டால்தான் நாடாளுமன்றம் செயல்பட அனுமதிப்போம்” என்று காங்கிரஸும் “விளக்கம் அளிப்பதோடு முடிந்தது கதை” என்று பாஜகவும் எடுத்த விடாகண்டன் - கொடாகண்டன் நிலைப்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல. இரு கட்சிகளின் அணுகுமுறையுமே மக்களையும் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்துகின்றன.

மன்மோகன் சிங்கை ‘மவுனி பாபா’ என்று கேலி செய்த நரேந்திர மோடி, இதுவரை வெளிப்படையாக இந்த விவகாரங்கள் குறித்து எதையும் பேசாதது வியப்பாக இருக்கிறது. இதுதான் ஊழலை ஒழிக்கும் வழிமுறையா? மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேச்சுகளையும் ட்விட்டரில் அவர் தெரிவித்த தகவல்களையும் பார்த்து மக்களுடனும் எதிர்க் கட்சிகளுடனும் பேசுவதற்கு நல்ல பிரதமர் கிடைத்துவிட்டார் என்றே நாடு மகிழ்ந்தது. ஆனால் அவரோ, முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார்.

மக்களவையில் லலித் மோடி விவகாரம் பற்றிய விவாதத்தின்போது அவையில் இருந்து நேரடியாகக் கேட்பதைக்கூடப் பிரதமர் மோடி தவிர்த்தார். சுதந்திர தின உரையில், குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட அரசாகச் செயல்படுகிறது என்று அரசுக்குச் சுயசான்று அளித்துக்கொண்டதன் மூலம், மீண்டும் அவர் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் மோடி.

மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மையால் பாஜக அராஜகப்போக்கில் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவையில் தங்களுக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தால் எதிர்க் கட்சிகள் எப்படி ஆக்கபூர்வமாகச் செயல்பட்டன என்று விளக்கியிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ராகுல் காந்தி தினந்தோறும் நாடாளுமன்றம் வந்து அவை நடவடிக்கைகளில் பங்குபெற ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறி. ஆனால், ‘முந்தைய நாடாளுமன்றத்தில் பாஜக செய்ததைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம்’ என்று காங்கிரஸார் கூறுவது அவர்களுக்குப் பெருமை சேர்க்காது.

பாஜக வழியில் போவதற்குத்தானா காங்கிரஸ் இருக்கிறது? பாஜக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசவும் காங்கிரஸில் நல்ல பேச்சாளர்களுக்கா பஞ்சம்? காங்கிரஸ் தனது போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆளும்கட்சிக்கு இந்த விவகாரத்தில் கூடுதல் பொறுப்பு உண்டு. எதிர்க் கட்சிகளை வெளியேற்றிவிட்டு அவையை நடத்துவது நல்ல ஜனநாயக மரபாகாது. எதிர்க் கட்சி கோரிக்கைகளின் நியாயங்களைப் பரிசீலிக்க வேண்டும். ஊழல், முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களைப் பதவி விலகச் சொல்லும் ஆரோக்கியமான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரதமரான பிறகு, நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையை மோடி நினைவுகூர வேண்டும். எதிர்க் கட்சிகளையும் கலந்தாலோசிப்பேன், அவர்களுக்கும் மதிப்பளிப்பேன் என்பதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x