Published : 05 Feb 2020 08:12 AM
Last Updated : 05 Feb 2020 08:12 AM

பொதுத் தேர்வு ரத்து நல்ல முடிவு; உறுதிபட நில்லுங்கள்!

ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவு. பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே குழந்தைகளும் பெற்றோர்களும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். தேர்வு நடத்தப்படும் விதம் குறித்துப் பள்ளி ஆசிரியர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் குழப்பத்திலேயே இருந்தனர். குழந்தைப் பருவத்தில் பொதுத் தேர்வு எனும் நடைமுறையைப் புகுத்துவதால் அவர்களின் உளவியலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், இவ்விஷயத்தில் சமூக, பொருளாதாரக் காரணிகள் செலுத்தும் தாக்கங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக தமிழக அரசு ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்துசெய்திருப்பது பாராட்டுக்குரியதாகிறது. இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல் திறன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘அஸர்’ போன்ற அறிக்கைகள் இத்தகைய கற்றல் குறைபாடுகளைத் தொடர்ந்து எடுத்துக்காட்டிவருகின்றன. அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையும் கற்பித்தல் முறையில் நிலவும் குறைபாடுமே மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என்பதையும் இத்தகைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப போதிய ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்கவும், கற்பிக்கும் முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்க அரசு ஆர்வம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக, மாணவர்களின் கற்றல் திறன் குறைபாட்டுக்கு முழுப் பொறுப்பும் ஆசிரியர்களே என்று கைகாட்டவே பொதுத் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எழுந்த எதிர்ப்பை அடுத்து, இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. எனினும், அரசின் இந்த முடிவு, தேர்வுகளைக் கைவிடும் முடிவாக மட்டுமின்றி, மாணவர்களின் நலன் குறித்த முழுமையான அக்கறையாகவும் மாற வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் நிலவிவரும் நீண்ட காலப் பிரச்சினைகளைக் களைவதற்குத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியைப் பெறுவது குழந்தைகளின் உரிமை என்பதோடு, தரமான கல்வியை அவர்களுக்கு அளிக்க வேண்டியது அரசின் கடமையும்கூட. அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கிறது; மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர் குறைவாக இருப்பதால், எஞ்சியிருக்கும் குழந்தைகளின் கற்றல் திறனில் முழுக் கவனம் காட்ட முடிவதில்லை. ஒப்பீட்டளவில், தனியார் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்பட்டிருக்கிறது என்பதற்கு, அங்குள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கையும் முக்கியமான காரணம். அதைச் சீரமைத்து ஆசிரியர்களிடம் முழுத் திறனையும் கற்பித்தல் நோக்கில் திருப்பினாலே கற்றல் நிறைவடையாமை பிரச்சினைகளுக்கான வேர்களை அரசு கண்டறிந்துவிடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x