Published : 25 Aug 2015 08:27 AM
Last Updated : 25 Aug 2015 08:27 AM

கணக்கிடும் முன்னே களத்தை பார்க்க வேண்டும்!

ஒருவழியாக ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் களமிறங்கியிருக்கிறது துருக்கி. சிரியா எல்லையை ஒட்டிய பகுதியில் ஐ.எஸ். தளங்கள் மீது துருக்கி வான் தாக்குதல்களை நடத்திவருகிறது. மேலும், தன்னுடைய நீண்ட கால நிலையை மாற்றிக்கொண்டு, தன்னுடைய இரு விமான தளங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் வழங்கியிருக்கிறது.

சிரியாவுக்குள் ஐ.எஸ். அமைப்பினர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, ஐ.எஸ். படைகளைத் தடுத்து நிறுத்துமாறு அமெரிக் காவும் பிற நாடுகளும் நெருக்குதல் கொடுத்தபோதும்கூட துருக்கி அமைதியாகவே இருந்தது. ஐ.எஸ். அமைப்பின் தொடர் தாக்குதல்கள் சிரியாவின் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் பஷார் அல் அஸாத் தலைமையிலான அரசு கவிழ வழிவகுக்கும் என்று ஆரம்பத்தில் அது கணக்கிட்டது. ஆனால், ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான குர்துகளின் எழுச்சி துருக்கியை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது என்பதை இப்போது உணர முடிகிறது.

சிரியா-துருக்கி எல்லைப் பிரதேசத்தில் உள்ள குர்துகளின் நகரங்கள் மீது ஐ.எஸ். படைகள் நடத்தும் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடியைத் தருகின்றன குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, மக்கள் பாதுகாப்பு அலகுகள் உள்ளிட்ட கூட்டுப் படைகள். குர்துகளின் உறுதியான தாக்குதலைக் கண்ட பிறகே அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வான் படை களத்தில் சுற்றியடிக்க ஆரம்பித்தது. ஆனால், துருக்கியைப் பொறுத்த அளவில் ஐ.எஸ். - குர்து அமைப்புகள் இரண்டையுமே சம தொலைவில் வைத்து அது பார்ப்பதை அதன் நகர்வுகள் உணர்த்துகின்றன.

துருக்கியின் இந்தப் பார்வையும் ராணுவ உத்தியும் சிக்கலானவை மட்டும் அல்ல; ஆபத்தானவையாகவும் தெரிகின்றன. ஏனென்றால், ஒருபுறம் ஒரே சமயத்தில் இருவர் மீதும் தாக்குதல் நடத்தினால் தன்னுடைய இரு எதிரிகளையும் வலுவிழக்கச் செய்துவிடலாம் என்று அது நினைக்கிறது. இன்னொருபுறம், அமெரிக்காவுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தத் தயார் என்று அறிவித்ததன் மூலம், குர்துகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் வான் பாதுகாப்பை விலக்கச் செய்துவிடலாம் என்றும் அது நினைக்கிறது.

துருக்கி ஒரு கள யதார்த்தத்தை எந்த அளவுக்குக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்றைக்கு அமெரிக்காவின் வான் தாக்குதலுக்குப் பலன் இருக்கிறது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் குர்துகள் தரையில் தாக்குதல் நடத்தும்போது ஐ.எஸ். அமைப்பினர் இரு தரப்பின் தாக்குதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியாமல் நெருக்கடிக்குள் சிக்குவது.

குர்துகள் சண்டையிடாவிட்டால், அமெரிக்க வான் படைகளால் பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என்கிறார்கள் வியூகவாதிகள். அதாவது, குர்துகளைத் துருக்கி குறிவைப்பதன் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரையே வலுவிழக்கச் செய்துவிடும் என்கிறார்கள். மேலும், துருக்கி நடத்தும் எந்தத் தாக்குதலும், துருக்கியிலேயே உள்நாட்டு மோதல்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள். இந்த எச்சரிக்கைகள் எதுவும் புறந்தள்ளக் கூடியவை அல்ல.

சமகாலத்தில் உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பின் ராணுவ வியூகங்களையும் ஆயுத பலங்களையும் அவ்வளவு எளிதாக மதிப்பிட்டுவிட முடியாது. துருக்கி குழம்பிய குட்டையில் எல்லா மீன்களையும் அள்ள வேண்டும் என்று கணக்கிட்டு களத்தில் இறங்கினால், மோசமான விளைவுகளையே அது உருவாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x