Published : 30 Jan 2020 07:35 AM
Last Updated : 30 Jan 2020 07:35 AM

பீமா கோரேகான்: ‘என்ஐஏ’ விசாரணையின் உள்நோக்கம் என்ன?

மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் வழக்கு விசாரணையை ‘தேசியப் புலனாய்வு முகமை’ (என்ஐஏ) அமைப்பிடம் மாற்றியுள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் திடீர் முடிவு, மாநிலத்தின் உரிமையில் தேவையின்றித் தலையிடுவது மட்டுமல்ல, அதன் நோக்கத்திலும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. முன்பு மகாராஷ்டிரத்தை பாஜக கூட்டணி அரசு ஆண்டபோது, இதே சம்பவம் தொடர்பாக அது நடத்திய விசாரணையின் முடிவு சரியல்ல என்ற உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில்தான், மத்திய அரசு அவசரமாகத் தலையிட்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் மராத்தியப் படைகளை பிரிட்டிஷார் படை, பீமா நதிக்கரை கிராமமான கோரேகானில் வீழ்த்தியதை நினைவுகூரும் நிகழ்ச்சியை தலித் அமைப்புகள் ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றன. உள்ளூர் படைகளின் தலைமைப் பீடமான ‘பேஷ்வா’ பதவியில் பிராமணர்கள் அப்போது இருந்தனர்; எதிரே பிரிட்டிஷார் படையில் தலித்துகள் மிகுந்திருந்தார்கள் என்ற பின்னணியில், சாதி ஆதிக்கத்துக்கு எதிரான தலித்துகளின் எழுச்சியாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. ‘உள்ளூர் ஆட்சியின் வீழ்ச்சியை எப்படிக் கொண்டாட முடியும்?’ என்ற பெயரில் மராத்தா மற்றும் பிராமண சமூகத்தினர் மத்தியில் தொடங்கிய பிரச்சாரம் ஒரு எதிர் அரசியலாக மாற... இறுதியில் இரண்டாண்டுகளுக்கு முன்பு புனேவில் நடந்த நினைவுகூரும் நிகழ்ச்சியானது கலவரத்தில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற செயல்பாட்டாளர்கள் மீது புனே போலீஸார் நடவடிக்கை எடுக்கலாயினர்; அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகள் சதியில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடியைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாக ஒரு கடிதத்தின்பேரில் கூறப்பட்டது. எனினும்், முதல் தகவல் அறிக்கையிலோ, எதிரிகளைக் கைதுசெய்து காவலில் வைத்து விசாரிக்கக் கோரும் மனுக்களிலோ அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. ‘சட்டவிரோதச் செயல்கள் (தடை) சட்டத்தின்’ (யுஏபிஏ) சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டாலும் ‘என்ஐஏ’ மூலம் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசும் அப்போது நினைக்கவில்லை.

அரசியல்ரீதியான எதிர்ப்பை ஒடுக்கவும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நினைப்போரை அச்சுறுத்தவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் அறிஞர்கள் ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக் போன்றோர் கோரினர். இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்று தீர்மானித்தது. புதிதாகப் பொறுப்பேற்ற சிவசேனை அரசு, இந்த வழக்கைக் கையில் எடுக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், திடீரென ‘இது மத்திய அரசு விசாரிக்க வேண்டிய வழக்கு’ என்று உரிமை கோரி ‘என்ஐஏ’வுக்குக் கீழ் வழக்கைக் கொண்டுவரும் முடிவை எடுத்திருக்கிறது மத்திய அரசு. ‘என்ஐஏ’ சட்டத்தின் ஒரு பிரிவு இதை அனுமதிக்கிறது என்றாலும், மாநில உரிமையில் தலையிடும் இத்தகைய ஏற்பாட்டுக்கு எதிராகவே சத்தீஸ்கர் மாநிலம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில், பீமா கோரேகான் வழக்கு என்னவாகும் என்பதை இனி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே நமக்குச் சொல்லும். எது எப்படியிருப்பினும், ‘என்ஐஏ நிறுவப்பட்டால் மாநிலங்களின் அதிகாரம் வலுவிழந்துவிடும்’ என்ற கவலை உண்மையாகிவருவதையே பீமா கோரேகான் விசாரணையும் எடுத்துக்காட்டுகிறது. இது சரியான போக்கு அல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x