

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்கள் கருத்துக்கேட்பும் தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பானது, காவிரிப் படுகை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை நியாயமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சென்ற மூன்றாண்டு காலமாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிவந்த மக்கள், அத்திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்ற மாநில அரசின் உறுதிமொழியை அடுத்துப் போராட்டங்களை விலக்கிக்கொண்டிருந்தனர். தங்களது விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகாது என்ற நம்பிக்கையுடன் சமாதானம் அடைந்திருந்த அவர்களை, மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு நிலைகுலைய வைத்திருக்கிறது.
அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் கண்டறிவதற்கு ஒரே உரிமம் வழங்கும் புதிய கொள்கையை 2017-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய உரிம முறையின் கீழ் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ‘வேதாந்தா’, ‘ஓஎன்ஜிசி’; இரண்டாம் கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் ‘ஆயில் இந்தியா லிமிடெட்’; மூன்றாம் கட்டமாக நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ‘ஓஎன்ஜிசி’ ஆகிய நிறுவனங்கள் உரிமங்களைப் பெற்றன. ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்ட புதிய ஏல அறிவிப்பின்படி, காவிரிப் படுகையில் கடலூரை ஒட்டியுள்ள ஆழமான கடற்பகுதி ஏலம்விடப்பட இருக்கிறது. இந்த ஏலம் மார்ச் 18-ல் நிறைவடைகிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் கடற்பகுதிகளில் மீன் வளம் பாதிக்கப்படும் என்று கடலோடிகள் அஞ்சுகின்றனர்.
எரிபொருள் தேவைகள் அதிகரித்துவருவதன் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு விவசாய நிலங்களைப் பாலைவனமாக்கிவிட்டு, எரிபொருள் தேவைகளைச் சமாளிப்பது தீர்வாக இருக்க முடியாது. புவிவெப்பமாதல், கடல் நீர்மட்டம் உயர்வு என்று உலகம் சூழல் சார்ந்து இன்று எதிர்கொள்ளும் சவாலானது உள்ளபடி எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியத்தையும் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் வளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான திட்டமிடுதலையுமே வலியுறுத்துகிறது. மேலும், நாட்டின் பெரும் பகுதியினர் விவசாயத்தையே தங்களது வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் சூழலில், இவ்வளவு பெரிய ஜனத்தொகைக்கு மாற்று வேலைவாய்ப்பும் கண்ணுக்கு எட்டியவரை தெரியாத நிலையில், அவர்களது விளைநிலங்களில் கை வைப்பதானது பெரும் சீரழிவில் கொண்டுபோய்விடும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காவிரிப் படுகை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்தார். மத்திய அரசும் அதை ஏற்றது. இந்நிலையில் மீத்தேன், நிலக்கரியையும் உள்ளடக்கி ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மாநில அரசிடமும் மக்களிடமும் கருத்துகள் கேட்காமலேயே புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருப்பது சரியல்ல. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரிப் படுகையைச் சேர்ந்த மக்களிடம் அனுமதி பெறாமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருப்பது நல்ல விஷயம்; இந்த விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக நிற்க வேண்டும்.