Published : 23 Jan 2020 07:15 am

Updated : 21 Feb 2020 17:08 pm

 

Published : 23 Jan 2020 07:15 AM
Last Updated : 21 Feb 2020 05:08 PM

ரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்?

rajinikanth-periyar-issue

நடிகர் ரஜினிகாந்த், ‘துக்ளக்’ விழாவில் அந்தப் பத்திரிகையின் பெருமைகளாகக் குறிப்பிட்டு பேசிய சில விஷயங்கள் திசை மாறி கேலி, கிண்டல், கண்டனம் என்று வளர்ந்து இப்போது சர்ச்சையாக உருவெடுத்திருப்பது நம்முடைய சமூக வெளி நாளுக்கு நாள் எவ்வளவு மோசமானதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

விழாவில் தன் உரையில், ‘துக்ளக்’ பத்திரிகையின் மறைந்த ஆசிரியரான சோ பல்வேறு சந்தர்ப்பங்களில் துணிச்சலாகச் செயல்பட்டார் என்று குறிப்பிட்டார் ரஜினி. இதை உதாரணப்படுத்தும் வகையில் 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் - சீதை படங்கள் அவமதிக்கப்பட்டன என்றும், ஏனைய பத்திரிகைகள் அரசின் அழுத்தம் காரணமாக அதைச் செய்தியாக்காத நிலையில், சோ தன்னுடைய பத்திரிகையில் துணிச்சலாக அதை வெளியிட்டார் என்று பொருள்படும்படியும் பேசியிருந்தார். 1971 சேலம் நிகழ்ச்சி தொடர்பான செய்தியானது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளியானது என்றாலும், அடிப்படையில் அவருடைய பேச்சின் சாராம்சமான, ஒரு பத்திரிகையாளராக சோவின் துணிச்சலை எவரும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்பதற்கு நெருக்கடிநிலைக் காலத்தில் அவருடைய செயல்பாடு ஒன்றே போதுமானது.

ரஜினி பேச்சின் தொடர்ச்சியாக, “சேலம் மாநாடு தொடர்பில் அவர் உண்மைக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தார்” என்று தொடங்கிய பெரியாரிய இயக்கங்கள் அதன் உச்சமாக “பெரியாரை ரஜினி அவமதிப்புக்குள்ளாக்கிவிட்டார்; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்லி ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் வரை சென்றிருக்கின்றன. போராட்டம் நடந்த நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே நான் பேசினேன்; ஆகையால், மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று அறிவித்தார். தொடர்ந்து, ரஜினியைக் கண்டித்து நீதிமன்றம் செல்வதாக அறிவித்திருக்கின்றன பெரியாரிய இயக்கங்கள். இந்த அணுகுமுறைகள் யாவும் அபத்தமானவை என்பதோடு, கருத்துச் சுதந்திரத்துக்கு விரோதமானவை, கண்டனத்துக்குரியவை, எல்லாவற்றுக்கும் மேல் தம்மளவிலேயே முரண்பாடானவை என்பதைச் சொல்ல பெரிய வியாக்கியானங்கள் தேவை இல்லை.

சாதி ஒழிப்பின் ஒரு பகுதியாகக் கடவுள் மறுப்பைப் பேசிய பெரியார் கடவுள்களுக்கு எதிராக இங்கே எவ்வளவு வன்மையாகப் பேசியவர், எழுதியவர், செயல்பட்டவர் என்பது அவரது வரலாறு நெடுகிலும் பதிவாகியிருக்கிறது. ஒருபுறம் நவீன பார்வையில், தமிழகத்தின் கருத்துச் சுதந்திர வெளியின் தாராளத்தன்மைக்கான முன்னுதாரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் அந்த வரலாறு, மறுபுறம் மரபார்ந்த பார்வையில், இந்து மதத்துக்குள்ளேயே கடவுள்களை விமர்சிக்கும், நாத்திகத்தைப் பேசும் நெடிய மரபின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. எனினும், மேம்பட்டுவரும் நாகரிக மதிப்பீடுகளில் இன்று வார்த்தைகள் பயன்பாடானது கூடுதல் கரிசனத்தைக் கோருகிறது. நேற்றைய வார்த்தைகளை நேற்றைய மதிப்பீடுகளோடும், இன்றைய வார்த்தைகளை இன்றைய மதிப்பீடுகளோடும் அணுகும் பார்வையை ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகம் அடைகிறது. இத்தகு சூழலில், கடவுளையே விமர்சிக்கும் அளவுக்குக் கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஒரு இயக்கம், தம்முடைய தலைவர், இயக்கம் தொடர்பான ஒரு செய்திக்காக இவ்வளவு பதறுவதும் எதிர்ப்பதும் பெரிய முரணாக இருக்கிறது.

பெரியாரியர்களின் மொத்த வாதமும் இந்த விஷயத்தில் ஒன்றுதான், “ரஜினி குறிப்பிட்டபடி ராமர் - சீதை படங்கள் நிர்வாணமாகவோ செருப்பு மாலை அணிவித்தோ எடுத்துச் செல்லப்படவில்லை; அந்த ஊர்வலத்தில் பெரியார் மீது காலணி வீசப்பட்டதன் எதிர்வினையாகவே கடவுளர் படங்கள் காலணியால் அவமதிக்கப்பட்டதானது நடந்துவிட்டது” என்பதே அது. சரி, ரஜினி சொன்ன அந்த ஒரு தகவலில் தவறு இருப்பதாகவே கொண்டாலும், ஒரு மறுப்பு அறிக்கையோடு முடிந்திடக்கூடிய விஷயம்தானே இது? இதற்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

ஓராண்டுக்கு முன் ஆண்டாள் தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைக்கு இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படுத்திய எதிர்ப்பையும், அப்போது இதே பெரியாரிய அமைப்புகள் முழங்கிய கருத்துச் சுதந்திரக் குரல்களையும் இங்கே நினைவில் கொண்டால், ‘ஊருக்குத்தான் உபதேசமா?’ என்ற கேள்விதான் எழுகிறது. போராட்டங்களை நடத்தியதற்காக வழக்குகளை எதிர்கொண்ட வேளைகளில் எதிர்த்து வழக்காடுவதையே பல சமயங்களில் தவிர்த்தவர் பெரியார். அவரின் கருத்தியல் வாரிசுகள் இன்று வழக்கு மன்றங்களைக் காட்டி பேச்சு சுதந்திரத்தை அச்சுறுத்துவது காலத்தின் முரண் அன்று வேறென்ன? சகிப்பின்மை நம் காலத்தின் ஓர்மையாகிவருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.


ரஜினிக்கான எதிர்வினைசுதந்திரச் சூழல்நடிகர் ரஜினிகாந்த்துக்ளக்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author