பொருளாதார வளர்ச்சிக்கு புரட்சிகரமான தீர்வுகள் தேவை

பொருளாதார வளர்ச்சிக்கு புரட்சிகரமான தீர்வுகள் தேவை
Updated on
2 min read

புதிய நிதிநிலை அறிக்கைக்கு அரசு தயாராகிவரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புரட்சிகரமான தீர்வுகளை உள்ளடக்கியதாக அது வெளிவர வேண்டும் என்ற மக்களின் தேட்டத்தை அரசுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டு தொடர்பான மத்திய அரசின் முன்கூட்டிய மதிப்பீடு, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் தொடர்பான சா்வதேசச் செலாவணி நிதியத்தின் மதிப்பீடு ஆகியவற்றின் பின்னணியும் சேர்த்து இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தேசியப் புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ), நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் (ஜிடிபி) 12 மாத காலத்தில் 5% அளவுக்கு இருக்கும் என்று கணிக்கிறது; இது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முழு ஆண்டுக்குமான வளர்ச்சி முன் எதிர்பார்த்தபடி 6.1% ஆக இருக்காது, 5% ஆகத்தான் இருக்கும் என்று திருத்தியதற்கு ஏற்ப இருக்கிறது. புதிய அரசு பதவியேற்றதும் ஜூலையில் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன், பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று என்எஸ்ஓ கணித்திருந்தது. வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைந்துவருவதால், 2% சரிவை அது எதிர்பார்க்கிறது. ஆனால், இப்போதைய கணிப்புகூட உண்மையான கள நிலவரத்துக்கு ஏற்ப இல்லாமல், நம்பிக்கையின்பேரிலேயே இருக்கிறது.

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 4.5% ஆகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆறரை ஆண்டுகளில் இதுதான் குறைந்தபட்சம். இதனால், முதல் ஆறு மாதங்களுக்கான வளர்ச்சி வீதத்தையும் இது 4.8% என்ற அளவுக்குக் கீழே இறக்கியிருக்கிறது. வரும் அக்டோபர் - மார்ச் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் வளர்ச்சி 5.2% ஆக உயர்ந்தால் என்எஸ்ஓ கணிப்பை எட்ட முடியும். பேரியியல் பொருளாதாரத் தரவுகளும், முக்கியமான செலவுகள் பற்றிய மதிப்பீடுகளும் சேர்ந்துதான் ஜிடிபியைத் தீர்மானிக்கின்றன. பொருளாதாரத்தின் மூலாதாரமே தனிநபர் நுகர்வுதான். பல்வேறு காரணங்களால் அது குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், என்எஸ்ஓ அமைப்போ எஞ்சியுள்ள காலத்தில் மக்கள் ரூ.4.77 லட்சம் கோடிக்குப் பொருட்களை வாங்குவார்கள் என்று கருதுகிறது. கடந்த ஆறு மாதங்களில் செலவழித்ததைவிட 12% அதிகம் செலவழித்தால்தான் இது சாத்தியம். அது எங்ஙனம் என்று புரியவில்லை.

நடப்பு நிதியாண்டின் கடைசி ஆறு மாதங்களில் முக்கியமான துறைகளில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று என்எஸ்ஓ மதிப்பீடு கருதுகிறது. தொழிற்சாலை உற்பத்தித் துறையில் வளர்ச்சியானது, முதல் ஆறு மாதங்களில் சென்ற ஆண்டைவிட 0.2% சுருங்கியது. அடுத்த ஆறு மாதங்களில் 2% வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறது என்எஸ்ஓ. ஆனால், உற்பத்தித் தரவுகள் அப்படி நம்பிக்கை அளிப்பதாக இல்லை. கடந்த ஆண்டைவிட 2.1% குறைந்திருக்கிறது என்பதே உண்மை. மொத்த நிரந்தர மூலதனத் திரட்டு 1% ஆக இருக்கிறது, கடந்த ஆண்டு 10% ஆக இருந்தது. அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் கணிசமாகக் குறைந்திருக்கிறது. எனவே, நிதிப் பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்த முடியாத இக்கட்டில் அரசு சிக்கியிருக்கிறது. புரட்சிகரமான தீர்வுகள் மூலம்தான் இதிலிருந்து மீள முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in