ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் மிகவும் பொறுப்பற்ற செயல்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் மிகவும் பொறுப்பற்ற செயல்
Updated on
1 min read

ஈரானின் புரட்சிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியை இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த தாக்குதலில் அமெரிக்கா தாக்கிக் கொன்றிருப்பது பொறுப்பற்ற செயல்.

மேற்காசியாவில் மீண்டும் முழு அளவில் போர் நடப்பதற்குத் தூண்டுதலாகவும் இது அமையக்கூடும். ஈரானியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட சுலைமானி சிரியாவிலும் இராக்கிலும் சமீபத்தில் நடந்த ராணுவத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர். சிரியாவில் பஷார்-அல்-அஸதின் ஆட்சியைக் காப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். ஐஎஸ் அமைப்பினர் சிரியா, இராக் நாடுகளில் தோல்வி அடைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரும் இவர்தான். ஷியா பிரிவைச் சேர்ந்த போராளிகளுக்குப் பயிற்சி தந்து சிரியா, இராக் போர்க்களங்களுக்கு அனுப்பிவைத்தார்.

அவர்கள் குர்து இன துணை ராணுவப் படையினருடன் இணைந்து இராக்கிய ராணுவம், அமெரிக்க வான்படை உதவியுடன் வடக்கு இராக்கில் நிலைகொண்டிருந்த ஐஎஸ் படையினருக்கு எதிராகப் போரிட்டனர். அமிர்லி நகரிலிருந்து மோசுல் வரையில் இச்சண்டை நடந்தது. ஐஎஸ் படைக்கு எதிராகப் போரிட அமெரிக்காவுக்கும் இராக்குக்கும் உதவியவரே இராக்குக்குள் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டிருப்பது மிகவும் பரிதாபகரமானது.

இப்படியொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பலர் முன்கூட்டியே எச்சரித்தனர். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் இந்த அளவுக்கு முற்றியதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே முக்கியக் காரணம். அமெரிக்கா - ஈரான் இடையே நிலவிய ‘விரோதமற்ற நிலை’யைத் தனியாளாக அழித்தவர் ட்ரம்ப்.

2015-ல் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்துசெய்ததுடன், ஈரான் மீது 2018-ல் பொருளாதார, ராணுவத் தடைகளையும் விதித்தார். சுலைமான் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் இதுவரை இருந்திராத அளவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது. 1979-ல் அமெரிக்கத் தூதரகத்தைப் புரட்சிக்காரர்கள் ஈரானில் முற்றுகையிட்டபோதுகூட இந்த அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கவில்லை.

மேற்காசியாவோ அடுத்தடுத்து வெவ்வேறு போர்கள், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், ஐஎஸ் ஆதிக்கம் என்று பல வழிகளிலும் அலைக்கழிக்கப்பட்டுவருகிறது. மேற்காசிய விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீடுகளும் அதிகம். இந்தத் தாக்குதலால் அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் மீண்டும் பேசலாம் என்று எடுத்த முயற்சிகளுக்குக்கூட இனி ஆதரவு அதிகம் இருக்காது. இதை வெறும் தாக்குதலாகக் கருதாமல் தன் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே ஈரான் பார்க்கிறது.

எந்தவொரு இறையாண்மை மிக்க நாடும் அவ்வாறுதான் பார்க்கும். இத்தாக்குதல் மேலும் சில தாக்குதல்களுக்குக் காரணமாகிவிட்டால், பிறகு மேற்காசிய நாடுகள் அனைத்திலும் அமைதியின்மையே பரவும். அது ஏராளமானோரைப் பலிவாங்குவதுடன், ஜிகாதி குழுக்கள் ஊக்குவிப்பு பெற வழிவகுத்துவிடும்.

ஆப்கானிஸ்தான், இராக் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு அதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இன்றுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து முழுதாக வெளியேறவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. முஸ்லிம் நாடுகளில் மீண்டும் ஒரு பெரும் மோதல் ஏற்படாமல் இருப்பது உலக நன்மைக்கு மிகவும் அவசியம். அமெரிக்கா தன் பொறுப்பற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in