Published : 04 Aug 2015 09:27 AM
Last Updated : 04 Aug 2015 09:27 AM

அகலாது அணுகாது கொள்க நட்புறவு!

இரு தசாப்தங்களாக அமைதியாக இருந்த பஞ்சாப் மீண்டும் பதற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. குருதாஸ்பூர் மாவட்டத்தில், ஒரு தாபாவிலும், காவல் நிலையத்தின் மீதும் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல, 80 பேருடன் பயணமான பஸ் ஒன்றைப் பயங்கரவாதிகள் குறிவைத்திருக்கின்றனர். பஸ்ஸைக் கைகாட்டி நிறுத்த முயன்றபோது, சுதாரித்த ஓட்டுநர் பஸ்ஸை வேகமாக ஓட்டிச் சென்றதால் ஏராளமானோரின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது. மேலும், ரயில் பாதைகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகளா, காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியப் பிரிவினைவாதிகளா என்ற சந்தேகம் எழுவது இயற்கை. காலிஸ்தான் முழக்கங்கள் இன்னும் மடிந்து விடவில்லை. காலிஸ்தான் ஆதரவு சக்திகள் தங்களுடைய நடவடிக்கை களைத் தீவிரப்படுத்திவருவதாக இந்திய உளவுத் துறை அரசை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் மட்டுமல்ல; அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், மாலத்தீவுகளில்கூட காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு இருப்பதாக அந்த எச்சரிக்கை அறிக்கையில் விவரிக்கப் பட்டிருந்தது.

கொடுங்கரங்கள் காலிஸ்தான் கோரிக்கைகளைக் கொண்டனவோ, இல்லையோ; எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையே இது என்றே இந்திய அரசும் சந்தேகிக்கிறது. “காஷ்மீர் மாநிலத்தில் காவலும் கண்காணிப்பும் அதிகம் இருப்பதால், விஷமிகளின் கவனம் இப்போது ஜம்மு பகுதியை நோக்கித் திரும்பியிருக்கிறது. ஜம்மு பகுதியைத் தாக்குவதன் மூலம் அவர்கள் இரு வித பலன்களை அடைய முடியும் என்று நினைக்கின்றனர். அதிக பாதுகாப்பு இல்லாத பகுதி என்பதால், அவர்களால் மிகக் குறைந்த முயற்சியிலேயே அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திவிட முடியும். மாநிலத்தின் ஜம்மு மக்களுக்கும் காஷ்மீர் மக்களுக் கும் இடையே பகைமையையும் பிளவையும் அதிகப்படுத்த முடியும் (ஜம்மு - இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி; காஷ்மீர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி). இந்தப் பின்னணியில்தான் ஜம்முவுக்கு அருகில் இருக்கும் பஞ்சாபின் இந்தப் பகுதியைத் தாக்குதல் இலக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஜம்முவைத் தாக்குவது அவர்களுடைய நோக்கமாக இருந்தாலும், பக்கத்தில் உள்ள பஞ்சாபிலும் நுழைந்து தாக்க முடிந்தால் நாசத்தை அதிகப்படுத்த முடியும் என்று திட்டமிட்டே தாக்கியிருக்கின்றனர்” என்கின்றன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டித்தான் ஊரி-ஜலந்தர் நெடுஞ்சாலை செல்கிறது. பாகிஸ்தான் பகுதியிலிருந்து இப்பகுதிக்கு வருவது எளிது. எல்லையில் இந்திய ராணுவம் அளித்துவரும் பாதுகாப்பைக் கேள்விக் குள்ளாக்கும் நோக்கமும் இப்படிப் புதிய இலக்குகளைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருக்கலாம் என்ற வாதமும் அர்த்தமுடையதே.

பாகிஸ்தான் - இந்தியா பேச்சுவார்த்தை தொடர்பான பேச்சுகள் சூடுபிடித் திருக்கும் நிலையில், நடந்திருக்கும் இந்தச் சம்பவம் இரு கேள்விகளை எழுப்புகிறது. பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையில் இந்தியாவு டனான உறவு தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றனவா; அல்லது பாகிஸ்தான் அரசே உள்ளொன்றும் வெளியொன்றுமாக நாடகமாடுகிறதா என்பதே அது. இன்றைக்குப் பயங்கரவாதத்துக்கு சர்வதேச அளவில் பெரிய விலை கொடுத்துக்கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், எப்படி? நமக்கும் பாடம் இருக்கிறது. எவ்வளவு நெருங்கினாலும், எச்சரிக்கையோடே பாகிஸ்தானை அணுக வேண்டும் என்பதே அது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x