மீண்டும் ஒரு நல்ல ஆரம்பம்!

மீண்டும் ஒரு நல்ல ஆரம்பம்!
Updated on
2 min read

நல்ல முயற்சிகள் எத்தனை முறை தடைகள், தோல்விகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் முன்னெடுப்பதில் தவறில்லை. நாகாலாந்தில் அமைதியை உருவாக்கும் வகையிலான மத்திய அரசு - நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஐசக் - முய்வா (என்.எஸ்.சி.என்.ஐ.எம்.) இடையிலான சமரச உடன்படிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்க வேண்டிய முயற்சிகளில் ஒன்று.

நாகாலாந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் பல்வேறு குழுக்களில் மிகப் பெரியதும் நீண்ட காலமாகக் களத்தில் இருப்பதுமான அமைப்பு நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஐசக் - முய்வா. அதேபோல, கோல் - கிடோவி பிரிவும் சீர்திருத்தக் குழுவும் அரசுடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், கடந்த ஜூனில் இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி, பெருமளவில் உயிரிழப்பை ஏற்படுத்திய ‘கப்லாங்’ அமைப்பு உள்ளிட்ட பல குழுக்கள் இந்த உடன்படிக்கையை ஏற்கவில்லை. மேலும், இந்த உடன்படிக்கையை விரும்பாத பல சிறு குழுக்கள் இப்போது ‘கப்லாங்’ குழுவுடன் நெருங்கியிருக்கின்றன. ஆகையால், இந்த நகர்வு அப்படியே நாகாலாந்தை அமைதியாக்கிவிடும் என்று சொல்லிவிட முடியாது. மேலும், அரசு இப்போது இந்த உடன்படிக்கையில் என்னென்ன ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கின்றன என்கிற முழு விவரமும் வெளியிடப்படவில்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி அமைதியை நோக்கிய முக்கியமான நகர்வு இது என்பது நிச்சயம்.

நாகர்கள் அடுத்தடுத்து வசிக்கும் பகுதிகள் நாகாலாந்தில் மட்டுமல்லாமல் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், அசாம், மியான்மரில்கூட இருக்கின்றன. நாகா ஆயுதப் போராளிக் குழுக்கள் அனைத்தின் பிரதான கோரிக்கையே இந்தப் பகுதிகள் அனைத்தையும் இணைத்து, ஒருங்கிணைந்த நாகாலாந்து பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். இப்போதைய நாகாலாந்து மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 16,527 ச.கி.மீ. நாகர்கள் கோரிக்கைப்படி பிரதேசங்களை இணைத்தால், அது 1.2 லட்சம் ச.கி.மீ. பரப்பளவு கொண்டதாக மாறும். ஆனால், வடகிழக்கின் ஏனைய இனக்குழுக்கள் இதை எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை. அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேச மாநில அரசுகள் நாகர்களின் கோரிக்கையை எப்போதுமே கடுமையாக எதிர்த்துவருகின்றன. இத்தகைய சூழலில்தான் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்படியான சமரசப் பேச்சுகளும் உடன்பாடுகளும் நாகாலாந்துக்குப் புதியவை அல்ல.

1947-ல் 9 அம்ச உடன்பாடும் 1960-ல் 16 அம்ச உடன்பாடும் 1975-ல் ஷில்லாங் உடன்பாடும் எட்டப்பட்டு, பிறகு முறிந்திருக்கின்றன. பி.வி.நரசிம்ம ராவ் தொடங்கி நரேந்திர மோடி வரையிலான எல்லா பிரதமர்களுமே நாகா குழுக்களின் தலைவர்களை வெளிநாடுகளில் சந்தித்து சமரசத் தீர்வுக்குப் பேச்சு நடத்தியுள்ளனர். அவையெல்லாம் ஏன் தோல்வியில் முடிந்தன என்பதற்கான காரணங்களை இரு தரப்புமே இப்போது நினைவில் வைத்திருப்பது முக்கியம். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு, தன்னுடைய மக்களுக்கும் மாநிலங்களுக்கும் எவ்வளவு அதிகாரங்களையும் இந்திய அரசு தருவதில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், அப்படியான அதிகாரப் பகிர்வு ஏனைய மாநிலங்கள், மக்களின் அதிகாரங்களில் கை வைப்பதாக இருக்கக் கூடாது என்பதை நாகா குழுக்கள் நினைவில் கொள்ள வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in