புகைமூட்டத்திலிருந்து வெளியே வரட்டும் டாடா நிறுவனம்

புகைமூட்டத்திலிருந்து வெளியே வரட்டும் டாடா நிறுவனம்
Updated on
1 min read

நாட்டின் முக்கியமான தனியார் பெருநிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் முதன்மை நிறுவனச் செயல் இயக்குநர் பதவியிலிருந்து சைரஸ் பி.மிஸ்ட்ரியை ‘டாடா சன்ஸ் லிமிடெட்’ மூன்று ஆண்டுகளுக்கு முன் நீக்கியதைச் சட்டவிரோதம் என்றும் மீண்டும் அவரைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்று தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது அந்நிறுவனத்தில் நிலவும் புகைமூட்டத்தை அதிகரிக்குமோ என்று தோன்றுகிறது.

முன்னதாக, ரத்தன் டாடா தலைமையிலான குழு பதவியிலிருந்து தன்னை நீக்கியதற்கு மிஸ்ட்ரி தெரிவித்த எதிர்ப்பை, ‘தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்’ 2016 அக்டோபரில் நிராகரித்திருந்தது. அந்த முடிவைத்தான் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவு இப்போது தலைகீழாக மாற்றிப்போட்டிருக்கிறது. முதலில், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவில், டாடா சன்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாரபட்சத்துடனோ அல்லது உறுப்பினர்களை ஒடுக்கும் வகையிலோ எடுக்கப்பட்டன என்பதற்கான உறுதியான குறிப்புகள் எதுவுமில்லை. ஆனால், இப்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குதாரர்களால் மனச்சாய்வுகளுடன் எடுக்கப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளால், பங்குதாரர்களில் ஒரு சிறுபான்மைக் குழுவினர் - ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுவினர் - பாதிப்புக்கு ஆளானதாகக் கூறியுள்ள மேல்முறையீட்டாளரின் கருத்தை ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம், அனைத்துச் சிறுபான்மைப் பங்குதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் இறங்கியுள்ளது.

டாடா அறக்கட்டளைகள், டாடா தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 81% பங்குகளையும், ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுவினர் 18% பங்குகளையும் கொண்டிருக்கும் நிலையில், டாடா குழுமத்தைக் கூட்டுப் பங்காண்மை நிறுவனத்தைப் போன்றதாகவே கருதி, டாடா குழுமம் இரண்டு குழுக்களைக் கொண்ட நிறுவனமாகச் செயல்படுவதற்கான தேவையைத் தீர்ப்பாயம் வலியுறுத்தியது. இது தொழில் நடவடிக்கைகளில் ஒவ்வொரு குழுவும் பரஸ்பரம் கட்டுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கும். தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவுகள், வெளிப்படைத் தன்மையையும் அரசு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. டாடா குழுமத்தைப் பொறுத்தவரையில், அது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவை, உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்போகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. டாடா குழுமம் கூட்டுப் பங்காண்மை நிறுவனமாகக் கருதப்பட வேண்டும் என்ற மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவை அது கேள்விக்கு உட்படுத்தும்.

டாடா குழுமம் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுவினருக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்திருக்கும் பரஸ்பர நம்பிக்கையும் புரிதலுமே நிறுவனத்தை நடத்திவந்திருக்கிறது என்ற அடிப்படையிலேயே மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. நிறுவனரீதியாக டாடா குழுமத்தைச் சூழ்ந்திருக்கும் புகைமூட்டத்தை இத்தீர்ப்பு அதிகமாக்கலாம்; 150 ஆண்டுகள் பாரம்பரியமும் பெருநிறுவனங்களில் தனித்துவமும் கொண்ட டாடா நிறுவனம் அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியே வருகிறதோ அவ்வளவுக்கு அந்நிறுவனத்துக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in