

ஒரு அரசாங்கம் தம் குடிமக்களைப் பாதுகாக்க எந்த எல்லைகள் வரையெல்லாம் செல்லும் என்பதற்கான எல்லைகளை நமக்குப் புதிதாகக் கற்றுக்கொடுக்கிறது இத்தாலி.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய கடலோடிகள் இருவர் இத்தாலியின் ‘என்ரிகா லெக்ஸி’எண்ணெய்க் கப்பலுக்குப் பாதுகாப்பாக வந்த கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள சர்வதேசக் கடல் சட்டங்களுக்கான நடுவர் மன்றத்தை இந்த வழக்கு தொடர்பாக அணுகியிருக்கிறது இத்தாலி. தங்கள் கடற்படை வீரர்கள் மீதான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான இடைக்காலத் தடையையும் அது கோரியிருக்கிறது. ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்கைக் குழப்பும் முயற்சி மட்டுமல்ல இது; இவ்வழக்கில் இருக்கும் அதீத தாமதத்தைக் காரணம் காட்டுவதன் மூலம் சர்வதேசத் தலையீட்டைக் கொண்டுவரும் முயற்சியும்கூட.
இந்திய நீதித் துறையின் தாமதக் கலாச்சாரம் உலகறிந்த ஒன்று என்றாலும், இந்த வழக்கின் தாமதத்தைப் பொறுத்தவரை இத்தாலி அரசின் நடவடிக்கைகளும் தாமதத்துக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. சர்வதேச உறவுகளை அனுசரித்து இந்த வழக்கில் எவ்வளவோ பெருந்தன்மையுடன் இந்திய அரசும், கருணையுடன் நீதித் துறையும் நடந்துகொண்டிருக்கின்றன. முன்னதாக, அவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட - மரண தண்டனைக்கு வழிவகுக்கும் - கடுமையான சட்டப் பிரிவுகளைக் கைவிடும் முடிவை இந்திய அரசு எடுத்தது. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இத்தாலி வீரர்களில் ஒருவரான மாசிமிலியானோ லத்தோர் இதய அறுவைச் சிகிச்சைக்காகத் தனது தாய்நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு இத்தாலியிலேயே தங்கியிருக்கலாம் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மற்றொரு வீரரான சல்வடோர் கிரோன் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தின் குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இரு நாடுகள் தொடர்புடைய விவகாரம், தவிர கடல் பகுதியில் நடந்தது என்பதாலேயே நிறைய சட்டச் சிக்கல்களை இந்த வழக்கு எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில், இத்தாலியின் சமீபத்திய நடவடிக்கைகள் தன்னுடைய வீரர்களைக் காப்பற்றுவதில் அது காட்டும் அக்கறை, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதில் இல்லை என்பதையே காட்டுகிறது. சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து தன் வீரர்களைக் காப்பாற்ற ரூ. 4.4 கோடியைத் தருவதாக அது முன்வைத்த பேரம் இதற்கு அப்பட்டமான ஒரு உதாரணம். இந்தியா இதை நிராகரித்து, ‘‘கொலைக்குற்றம் இழப்பீட்டால் சரிசெய்யப்படும் விஷயம் அல்ல’’ என்று சுட்டிக்காட்டியி ருப்பதும் ‘‘சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் நான்கு மாதங்களில் இவ்வழக்கை முடித்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சர்வதேசக் கடல் சட்டங்களுக்கான நடுவர் மன்றத்திடம் கூறியிருப்பதும் நல்ல விஷயங்கள்.
இந்திய - ஐரோப்பிய உறவை மனதில்கொண்டு, இதுவரை ரொம்பவும் ஜாக்கிரதையுடனே இந்த வழக்கைக் கையாண்டிருக்கிறது நம்முடைய அரசு. எனினும், சர்வதேச உறவுகளுக்காக இந்நாட்டின் குடிமக்கள் உயிரை நாம் விலையாகக் கொடுக்க முடியாது. நீதியை விலைக்கு கொடுக்க முடியாது. இந்நாட்டுக் குடிமக்களுக்கான பாதுகாப்பு என்பது ஒருவகையில் நாட்டின் இறையாண்மையோடு தொடர்புடையது என்பதை மனதில் கொண்டு இந்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் அமைய வேண்டும்!