நிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? 

நிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? 
Updated on
1 min read

விலைவாசி அதிகரித்துவருகிறது. அரசின் நிதிப் பற்றாக்குறை இன்னொருபுறம். பணவீக்கம் அதிகரிக்கிறது என்பதற்காகவோ, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது என்பதற்காகவோ அரசு தன்னுடைய செலவுகளைக் குறைக்க முடியாது. அது பொருளாதாரத்தை மேலும் பாதித்துவிடும். வருவாயைப் பெருக்கும் வழிகளில் அதிகக் கவனம் செலுத்தும் அதே வேளையில், பொருளாதார மீட்சிக்கான வழிகளையும் தொடர்ந்து மேற்கொண்டாக வேண்டும்.

பொருளாதார மீட்சிக்காக மத்திய அரசு ஒவ்வொரு துறையாக ஆராய்ந்து, சில சலுகைகளையும் வரிக் குறைப்புகளையும் அறிவித்துவருகிறது. அடுத்து, வருமான வரி விகிதத்திலும் மாறுதல்கள் வரலாம்; மத்திய தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகைகள் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், அரசின் வரி வருவாயும் இதர வருவாய்களும் கணிசமாகக் குறைந்திருக்கும் நிலையில், இவை எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. ரிசர்வ் வங்கியே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை எப்படி அமையப்போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறது. அதையொட்டித்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய பணக் கொள்கைக் குழு ஆய்வுக்குப் பிறகு, வட்டியை (ரெபோ ரேட்) இப்போதுள்ள 5.15% என்ற அளவிலிருந்து மேலும் குறைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி முதல் வட்டிவீதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தும் எதிர்பார்த்த அளவுக்குத் தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுவிடவில்லை.

அதைவிட முக்கியமாக, ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்த அதே அளவுக்குப் பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியைக் குறைக்கவில்லை. வாராக் கடன்களால் வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் வங்கிகள், வட்டியைக் குறைக்காமல் தங்களுடைய வருவாயைச் சற்றே அதிகரிக்கவும் விரும்புகிறது. இந்தக் காரணங்களால் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தரும் பணத்துக்கான வட்டியை மேலும் குறைக்காமல் அப்படியே பராமரிக்க இப்போது முடிவெடுத்துள்ளது.

தொழில் நிறுவனங்களின் ‘கொள்முதல் மேலாளர்கள் அட்டவணை’ என்ற குறியீடு நவம்பரில் சற்றே அதிகரித்திருக்கிறது. உற்பத்தியை அதிகப்படுத்த தொழில் நிறுவனங்கள் கொள்முதல்களை அதிகப்படுத்துகின்றன. இது உற்பத்தித் துறைக்கு மட்டுமல்லாமல், அரசுக்கும் நம்பிக்கை ஊட்டும் அறிகுறியாகும். இப்போதைக்கு மக்களிடையே குறைந்திருக்கும் நுகர்வு அளவைப் பெருக்குவதுதான் அரசின் உடனடிச் செயல்திட்டமாக இருக்க வேண்டும். பருவம் தவறிப் பெய்த பெருமழையால் பல மாநிலங்களில் சாகுபடியாகிக்கொண்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதில் கணிசமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இந்தக் காலாண்டில் அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வால் பல்வேறு குற்ற நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. பொதுமக்களிடம் தொற்றிக் கொண்டிருக்கும் பதற்றத்துக்கு அரசு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். நிதிப் பற்றாக்குறையைச் சீராக்குவதில் காட்டும் முனைப்பும் தீவிரம் பெற வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in