உள்ளாட்சித் தேர்தலை மேலும் தள்ளிப்போடுவதற்கான காரணங்களைத் தேடாதீர்கள்!

உள்ளாட்சித் தேர்தலை மேலும் தள்ளிப்போடுவதற்கான காரணங்களைத் தேடாதீர்கள்!
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்துவந்த குளறுபடி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்த தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் இன்று வரை நீடித்துவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மூன்றாண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பு இல்லாமலேயே அரசு அலுவலர்களைக் கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. இவ்வளவு காலமும் தள்ளிப்போடப்பட்டது உள்ளாட்சித் தேர்தலை மட்டுமல்ல; அரசுத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றுசேரும் வாய்ப்பு, தேர்தல் அரசியலில் பெண்களின் பங்கேற்பு, சமூகரீதியிலான அடித்தட்டு மக்கள் அரசியல் பங்கேற்பு என எல்லாமும்தான் இதன் மூலம் மறுக்கப்பட்டிருக்கிறது.

2016 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடித்துவிட முயன்றது அதிமுக அரசு. ஆனால், தேர்தல் அறிவிப்பில் பழங்குடியினருக்கும் பட்டியலினத்தவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது விவாதமானது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளால் அப்போதைய உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. எளிதில் சரிசெய்திருக்கக்கூடிய பிரச்சினை இது. ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, அடுத்து அவருடைய மறைவு, ஆட்சிக் குழப்பங்கள், கட்சிப் பிளவுகள் என்று அடுத்தடுத்து சங்கடங்களைச் சந்தித்த அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து வெவ்வேறு விஷயங்களைக் காரணம் காட்டி காலத்தை இழுத்தடித்துக்கொண்டே இருந்தது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் தேதியை வெளியிட்டிருக்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம். ஆனால், நகர்ப்புற அமைப்புகள் தவிர்க்கப்பட்டு, ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்துள்ளன. அது நியாயமானதுதான். இந்நிலையில், புது மாவட்டங்களின் மறுவரையறைப் பணிகளை முடிக்காமல் தேர்தலை அறிவித்திருப்பதாக திமுக இப்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஆக, ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளை ஆளுங்கட்சியும் குற்றஞ்சாட்டியபடி விவகாரத்தை மீண்டும் இழுத்தடிக்கத் தொடங்கியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் தமிழகம் இழந்தது ஏராளம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் ஊராட்சி அமைப்புகளுக்கு நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், கடந்த ஐந்தாண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகையில் ரூ.1.22 லட்சம் கோடி செலவழிக்க முடியாமல்போனது. இதனால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைப்பட்டன. கழிவு மேலாண்மையில் ஏற்பட்ட கடுமையான சுணக்கத்துக்கும் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கிக்கிடந்தது முக்கியமான காரணம். எல்லாவற்றையும் கடந்து, ஒரு பெரும் பொருளாதார மந்தத்தை இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நூறு நாள் வேலை என்று அழைக்கப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை முன்பைக்காட்டிலும் இன்று தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி நிர்வாகம் சுணங்கிக்கிடப்பது துரதிர்ஷ்டவசமானது. இன்னும் காலம் தாழ்த்துவதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிராமல் திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in