Published : 03 Dec 2019 09:56 AM
Last Updated : 03 Dec 2019 09:56 AM

புதிய வடிவம் எடுக்கட்டும் சிவசேனை அரசு! 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் ஆகாதி கூட்டணி ஆட்சியமைத்திருக்கிறது. இக்கூட்டணியின் பொதுச் செயல்திட்டமாக மாநில வளர்ச்சியும் மதச்சார்பின்மையும் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன.

மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சிவசேனையின் உத்தவ் தாக்கரேவுக்கு முன்னால் உள்ள சவால்களில் முக்கியமானது, அவரின் தந்தையும் சிவசேனையைத் தோற்றுவித்தவருமான பால் தாக்கரேவிடமிருந்து மாறுபட்ட ஒரு அரசியலைத் தருவது.

மதச் சிறுபான்மையினரிடமும் மொழிச் சிறுபான்மையினரிடமும் பாகுபாட்டுடன் நடந்துகொள்ளும் அரசியலை முன்னெடுத்துச் சென்ற பால் தாக்கரேவுக்கு மாறாக, “குடிமக்கள் எவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் எதுவும் அனுமதிக்கப்படாது” என்று உத்தவ் தாக்கரே அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

கடந்த காலத்தில் மூர்க்கமாக நடந்துகொண்ட வரலாறு உத்தவ் தாக்கரேவுக்கும் உண்டு. ஆனால், புதிய கூட்டணியை அமைத்ததன் மூலம் இனியாவது மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தச் சுமை சிவசேனையின் மேல்தான் விழுந்திருக்கிறது. இப்போது ஆட்சியமைத்திருப்பது அவர் தங்கள் கட்சி அரசியலை மறுசீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதலாம்.

சிவசேனையின் இந்துத்துவக் கூட்டாளிகளாக இருந்து கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பாஜக எதிர் நடவடிக்கையில் எப்போது ஈடுபடலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறது. உத்தவ் தாக்கரேவின் தந்தை முன்பு முதலமைச்சர் பதவியை ஏற்காமல் அந்த ஆட்சியைத் தொலைவிலிருந்து இயக்கும் சூத்திரதாரியாக இருந்தார். ஆனால், உத்தவ் தாக்கரே முதல்வராகியிருக்கிறார். முதல்வராக இருப்பது மேலும் கடினமானது.

ஆளும் கூட்டணியின் பொதுச் செயல்திட்டம் காங்கிரஸுக்கும் சிவசேனைக்குமான இடைவெளியை நிரப்பப்பார்க்கிறது. சாதாரண மக்களின் பிரச்சினைகள், குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினைகள் இந்தப் பொதுச் செயல்திட்டத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. வேளாண் துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உத்தவ் தாக்கரே வாக்குறுதி அளித்திருக்கிறார்.

மருத்துவம், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கான கூறுகளும் இடம்பெற்றிருக்கின்றன. மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டமானது பொருளாதாரரீதியில் எவ்வளவு பலனளிக்கும் என்பது சந்தேகத்துக்குரிய நிலையிலும் சுற்றுச்சூழலை அது பாதிப்பதற்கு வாய்ப்புள்ளதாலும் அந்தத் திட்டத்தைப் புதிய அரசு நிறுத்திவைக்கும் என்று தெரிகிறது.

ஆளும் கூட்டணி கிராமப்புறத்தினரின் வருமானத்தை உயர்த்துவதிலும் அவர்களின் தேவைகள் மீதும் கவனம் செலுத்தினால் பொருளாதாரத்தில் அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். பிராந்தியரீதியிலான பெருமிதமும் கலாச்சாரரீதியிலான நம்பிக்கையும் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% இடஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு, பிராந்தியநல அடிப்படையிலானது. உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதுபோல், இந்தக் கூட்டணியானது அசாதாரண சூழல்களின் விளைவாகும்.

எனினும், சிவசேனை தன் மீது விழுந்திருக்கும் முத்திரையைத் தாண்டியும் மக்களுக்கான அரசாகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டாத அரசாகவும் அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அரசை உத்தவ் தாக்கரே தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x