

சீன நாட்டுக்குச் சொந்தமான ஹாங்காங் தீவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில், ஜனநாயக ஆதரவாளர்கள் அமோக வெற்றிபெற்றுள்ளனர். சீன அரசுக்கு ஆதரவான வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக நடைபெறும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் விளைவுதான் இந்த முடிவு. இந்தத் தீர்ப்பை ஏற்பதாகவும், மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை இதன் அடிப்படையில் பரிசீலிப்பதாகவும் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்திருக்கிறார்.
மொத்தமுள்ள 18 மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் ஜனநாயக ஆதரவாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளன. நகரில் குப்பைகளை அகற்றுவது, நகர பூங்காக்களைப் பராமரிப்பது போன்ற உள்ளாட்சிப் பணிகளை மட்டும்தான் இந்த கவுன்சில் மேற்கொள்ள முடியும். மிகுந்த அதிகாரமோ செல்வாக்கோ உள்ள அமைப்பு அல்ல இது. இருந்தாலும், இந்த முடிவின் மூலம் மக்களுடைய உணர்வு எப்படிப்பட்டவை என்பது ஆட்சியாளர்களுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கிறது. பதிவுசெய்துகொண்ட வாக்காளர்களில் 29.4 லட்சம் பேர் (71.2%) வாக்களித்துள்ளனர். 2015 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 47% அதிகம். 452 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட கவுன்சிலில் ஜனநாயக ஆதரவாளர்கள் 392 இடங்களில் வென்றனர். சீன அரசுக்கு ஆதரவான கட்சிகளால் 60 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. முந்தைய தேர்தலில் இவர்கள் 292 இடங்களில் வென்றிருந்தனர்.
ஹாங்காங்கில் குற்றம் செய்தவர்களைக் கைதுசெய்து சீனாவுக்கு அனுப்பலாம் என்ற சட்டம் இயற்றப்பட நடந்த முயற்சியை எதிர்த்து ஆறு மாதங்களுக்கு முன்னால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு பெரிய போராட்டமாக வெடித்தது. அதற்குப் பிறகும் அரசும் போராட்டக்காரர்களும் அடுத்தடுத்து சில தவறுகளையும் செய்தனர். மக்களுடைய கோபம் அதிகரிப்பதைப் பார்த்த பிறகும் அந்தச் சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற ஹாங்காங் அரசு மறுத்தது. இதனால், போராட்டம் வலுவடைந்தது. சர்வதேச கவனம் ஹாங்காங் மீது குவியத் தொடங்கியதும், அந்த மசோதாவைத் திரும்பப் பெற அரசு முன்வந்தது. ஆனால், அதற்குள் நிலைமை கைமீறிவிட்டது. ஹாங்காங் நிர்வாகியான கேரி லாம் பதவி விலக வேண்டும், போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், மேலும் தேர்தல் சீர்திருத்தங்களையும் ஜனநாயகச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினர். இரண்டு தரப்பினருமே வன்முறைகளைக் கையாண்டனர்.
ஹாங்காங்கின் பொருளாதாரமே இந்தப் போராட்டத்தால் மிக மோசமான சரிவைச் சந்தித்தது. சுறுசுறுப்பான வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகள் ஓய்ந்து பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இப்போது அரசியல் களத்திலும் தேக்க நிலையே நிலவுகிறது. மக்களின் தீர்ப்பைப் பார்த்த பிறகாவது சீன அரசானது ஹாங்காங் தன்னாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்ற மக்களின் அபிலாஷைக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப தன் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். வன்முறைச் செயல்களுக்கு இருதரப்பும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.