எபோலாவுக்கு எதிரான போரில் அடுத்தகட்ட நகர்வு!

எபோலாவுக்கு எதிரான போரில் அடுத்தகட்ட நகர்வு!
Updated on
2 min read

மனித உயிர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எபோலா வைரஸுக்குப் பாதுகாப்பான, விரும்பிய பலன்களைத் தரக்கூடிய தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அறிவியல் அறிஞர்கள் குழு வெற்றி பெற்றிருக்கிறது. ‘ஆர்விஎஸ்வி - செபோவ்’(RVSV-ZEBOV) என்று இது அழைக்கப்படுகிறது. சலியாத உழைப்பையும் ஆர்வத்தையும் செலுத்தி எப்படியாவது இக்கொடும் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அறிவியலாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்திருக்கும் பலன் இது.

கினி நாட்டில் இந்தத் தடுப்பூசியைச் சோதனை முறையில் பயன்படுத்தினர். தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்குப் பிறகு பலன் தெரியத் தொடங்கிவிட்டது. 2,014 பேர் தேர்வுசெய்யப்பட்டு, தடுப்பூசி மருந்து செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப் பட்டனர். 10 நாட்களில் நல்ல பலன் ஏற்பட்டிருக்கிறது. மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர்கள் தொடர் கண்காணிப்பு, ஆய்வில் வைக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ஆதரவிலான இந்தச் சோதனையில் 2,014 பேர் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றனர். இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் போட்டால்தான் முழுப் பலனும் தெரியவரும். எபோலாவால் பாதிக்கப்பட்டவருடன் நேரடியாகத் தொடர்புகொண்ட அவருடைய வீட்டார், அவர்களுடைய உறவினர்கள், அவர்களை வந்து பார்த்தவர்கள் ஆகியோருக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

கினி நாட்டில் எபோலா பரவி ஓராண்டாகிறது. கடந்த ஜூலை வரை 3,786 பேர் படுத்த படுக்கையானார்கள், 2,520 பேர் உயிரிழந்தனர். அதே காலத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியரா லியோன் ஆகிய மூன்று நாடுகளிலும் எபோலா பீடித்தவர்கள் 27,748 பேர், எபோலாவால் இறந்தவர்கள் 11,279 பேர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

நோய்வாய்ப்பட்டவர்களின் அருகில் செல்பவர்களுக்கும் சடலத் துக்கு இறுதிக் கிரியை செய்பவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுகிறது. பிறகு, அவர்களின் எச்சில் போன்றவற்றால் மற்றவர் களுக்கும் பரவுகிறது. எனவே, 1970-களில் அம்மை நோயை ஒழிக்கக் கையாண்ட அதே ‘வட்டத் தடுப்பூசி முறை’ இப்போது பின்பற்றப் படுகிறது. நோயாளியின் உறவினர்கள், அவர்களுடைய வீடுகளுக்கு வந்துபோகிறவர்கள், வந்துபோனவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் என்று மிகப் பெரிய வட்டம் அடையாளம் காணப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என்று ஒருவரும் விட்டுவைக்கப்படவில்லை. இந்த நோயின் தன்மை, தீவிரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உருவாக்கப்பட்டதால், மக்கள் தடுப்பூசிகளையும் தாங்களாகவே முன்வந்து போட்டுக்கொள்கின்றனர். இந்த முறையில்தான் எபோலா பரவுவதைத் தடுக்க முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கினி நாட்டில் மட்டுமல்லாமல் லைபீரியா, சியரா லியோன் நாடுகளிலும் இனி இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்படும். எபோலாவைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று உலகமே திகைத்துக்கொண்டிருந்த நிலையில், இந்தத் தடுப்பூசி மருந்து கிடைத்திருப்பது மிகப் பெரிய நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் மனிதர்களை மட்டும் பலிவாங்கவில்லை, வியாபாரம், தொழில், விவசாயம், சுற்றுலா, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளையும் முடக்கி, நாடுகளின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிட்டது. உலகின் எந்தப் பகுதியிலும் எபோலா பரவிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எல்லா அரசுகளுக்கும் இருக்கிறது. அந்தப் போரில் இந்தத் தடுப்பூசி முக்கியமான ஆயுதமாக இருக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in