Published : 19 Nov 2019 10:38 AM
Last Updated : 19 Nov 2019 10:38 AM

சிறுபான்மையினர் நலனை கோத்தபய அரசு பொருட்படுத்த வேண்டும்

இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல. ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கிருந்த அதிருப்தியைப் போக்கும் விதத்தில் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரம் அமையவில்லை. இலங்கையின் தெற்கில், குறிப்பாக சிங்களர்களிடையே முந்தைய அரசின் மீது அதிருப்தி மட்டுமல்ல அவநம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது. தமிழர்கள், முஸ்லிம்கள் பெருமளவுக்கு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர்.

இலங்கை சுதந்திர கட்சித் தலைவரான சிறிசேனாவும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக 2015-ல் கூட்டரசு அமைத்தனர். சிறிசேனா அதிபராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றனர். ஆனால், அவ்விரு கட்சிகளின் கூட்டரசு பொருளாதாரம், ராணுவம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, அகதிகள் மறுசீரமைப்பு என்று எந்தத் துறையிலும் தீவிரமாகச் செயல்படவில்லை. பரஸ்பர நம்பிக்கை குறைந்ததாலும் மெத்தனம் அதிகமானதாலும் அரசு நிர்வாகமே மந்த கதியில்தான் இருந்தது. தமிழர்களின் முக்கியக் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் சீர்திருத்தத்துக்கும் வளர்ச்சிக்குமாக மக்கள் அளித்த வாக்குகள் வீணடிக்கப்பட்டன. சட்டமியற்றும் அதிபர் பதவியின் அதிகாரம் குறைக்கப்படும், பிரதமர் பதவி முக்கியத்துவம் பெறும், தமிழர்களின் காணிகள் திரும்பத் தரப்படும், தமிழர்கள் அவரவர் இடங்களில் மீள் குடியேற்றம் பெறுவார்கள், தேசிய நீரோட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய நடவடிக்கை எடுக்கப்படும், மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் என்ற உறுதிமொழிகள் வெறும் வார்த்தைகளாகவே நின்றுவிட்டன.

2009-ல் நடந்த போரின்போது, ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கவும் காணாமல்போகவும் ராஜபக்சக்கள்தான் காரணம் என்பது தமிழர்களின் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்குப் பின் வந்தவர்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்தனர் என்பதும் தமிழர்களின் ஆதங்கம். முஸ்லிம்களின் அச்சமெல்லாம் பெரும்பான்மையினவாதம் இனி தலைதூக்கும் என்பதுதான். கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறன்று, இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்து இலங்கை அரசின் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.

புதிய அரசு இவற்றை நிறைவேற்றும் என்று நம்புவதில் அர்த்தம் இல்லை. அதிபர் பதவியில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்ற சட்டம்கூட இனி திருத்தப்படலாம். ‘தேசப் பாதுகாப்புக்காக’ என்ற பெயரில் சிறுபான்மையினர் நலன்கள் அலட்சியப்படுத்தப்படலாம். இந்த அச்சங்களைப் போக்க வேண்டியது புதிய அதிபரின் கடமை. புதிய அதிபர் சீன ஆதரவாளர் என்பது உலகறிந்த ரகசியம். அதற்காக இந்திய அரசைப் பகைத்துக்கொள்ளும் விதத்தில் அவர் செயல்பட மாட்டார் என்று நம்புவோம். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் இலங்கையின் புதிய அரசு மீண்டும் தவறுகள் இழைத்துவிடாதவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. கோத்தபய அதிபரானால் இப்படித்தான் நடந்துகொள்வார் என்ற கணிப்பைப் பொய்யாக்கினால், அது இலங்கையின் ஐக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x