Published : 13 Nov 2019 07:33 am

Updated : 13 Nov 2019 07:33 am

 

Published : 13 Nov 2019 07:33 AM
Last Updated : 13 Nov 2019 07:33 AM

அயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்

the-judgment-of-ayodhya

ரத்தம் குடிக்க நினைத்த சக்திகள் ஏமாந்துபோய்விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். அயோத்தி விவகாரத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த 1,045 பக்கத் தீர்ப்பில் மிகப் பாராட்டப்பட வேண்டிய விஷயம் - அது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பையுமே வரவேற்கச் செய்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பு எந்தவொரு தரப்புக்கும் முழுமையான பாதகமாக இருந்திருந்தாலும் அதைத் தொடர்ந்து தேசத்தின் அமைதியை ஒட்டுமொத்தமாகக் குலைக்கக்கூடிய விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும். அவ்வாறு இல்லாமல் இரு தரப்புக்குமே ஒரு பரிகாரமாக இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பதை மத அமைப்புகள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.


வரலாறு, மத நம்பிக்கை, அடிப்படை ஆதாரங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி, நீண்டதொரு காலமாகப் புகைந்துகொண்டிருந்த வெடிகுண்டை மிக நுட்பமாகக் கவனித்து அணைத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக இந்தியாவுக்குள் இடைவிடாமல் அரங்கேறிவந்த மதப் பிரிவினைவாதச் செயல்பாடுகளை அப்படியே கருத்தில் எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலடியாக இந்தத் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

அதேசமயம், மதச்சார்பற்ற இந்திய மனப்பான்மையின் மீது தாக்குதல் நிகழ்த்திய சம்பவங்களைக் குறித்த கண்டனத்தையும் நன்றாகவே பதிவுசெய்திருக்கிறது. டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதிர்ச்சிகரமான நிகழ்வு மற்றும் அதே டிசம்பர் 6-ம் தேதியைப் பின்னாளில் அஞ்சத்தக்க ஒரு நாளாக மாற்றி, குண்டுவெடிப்புகளில் இறங்கிய நிகழ்வுகள் ஆகியவைதான் அவை.

இந்தத் தீர்ப்பு வேறு எந்தவிதமாக வழங்கப்பட்டிருந்தாலும் அதை வைத்து வன்முறைச் செயல்களைத் தூண்டிவிட்டு, அதைத் தமக்கு சாதகமாக்கிக்கொள்ள இந்தியாவின் உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் காத்திருந்தன என்பதையும் மறுக்க முடியாது. அதைத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நாடு முழுவதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு கண்காணித்ததோடு, அமைதியைச் சீர்குலைக்கும் சக்திகள் எதுவும் ஆட்டம் போடாதபடி துல்லியமான புலனாய்வின் மூலம் தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த வகையில் மத்திய அரசையும் பாராட்டத்தான் வேண்டும்.

இந்தத் தீர்ப்பைப் படித்துப் பார்க்கும்போது, நடந்து முடிந்த வரலாற்றுத் தவறைத் திருத்துவது எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் அமைதியையும் கருத்தில் கொள்வது முக்கியம் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டிருப்பது புரிகிறது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வும், அதன் பிறகு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளும் மதத்துக்கு அப்பாற்பட்ட இந்தியச் சிந்தனையின் மீது பேரிடிகளாகவே விழுந்தன; இந்தியாவின் சமூக நல்லிணக்க இதயத்தில் ஆழமான ஒரு புண்ணை இந்நிகழ்வுகள் தோற்றுவித்தன.

சட்டபூர்வமாகத் தீர்ப்பை அணுகும் எவருக்கும், பாபர் மசூதியில் நடந்த அத்துமீறல் தாக்குதல்களைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அதேசமயம் தன் தீர்ப்பில் கோயிலுக்கும் மசூதிக்கும் குறிப்பிட்டிருக்கும் இடங்கள் அந்த அத்துமீறல்களின் பின்னணியிலிருந்த நோக்கத்துக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல அமைந்திருக்கிறதே என்ற முரண் தரும் ஏமாற்றம் ஏற்படலாம். மனுதாரர்கள் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவித்துவிட்டு, ஒரு தரப்பால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையை மட்டும் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது; அவர்கள் தண்டிக்கப்படுவதுதான் வன்முறை வழியே எல்லாவற்றையும் தீர்மானித்துவிடலாம் என்று செயல்படுவோருக்குக் குறைந்தபட்சமேனும் விடுக்கப்படும் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

தீர்ப்பை எதிர்த்து சீராய்வுக்குச் செல்லும் வாய்ப்பைப் புறக்கணிக்கும் முடிவை நோக்கி முஸ்லிம் சமூகம் நகர்ந்திருப்பதை, இந்த நாட்டின் அமைப்புகள் மீதும், அரசியல் மீதும், ஜனநாயக விழுமியங்கள் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்க வேண்டும். கூடவே, கடந்த காலத்தின் களைகளை அறுத்தெறியும் துணிபாகவும் நாம் கருதலாம். அதேசமயம், இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்கள் எதையும் நிகழ்த்தாமல் தவிர்த்ததன் மூலம், முஸ்லிம் சமூகத்தின் மனம் எந்த வகையிலும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்து சமூகம் காட்டிய நிதானத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், மீண்டும் ராமர் கோயில் கட்டுவதையும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் அரசியலுக்காக மீண்டும் மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்திவந்த நிலை இனி இருக்காது. ஒரு நல்லிணக்கமான எதிர்காலத்தை மனதில் கொண்டு 5 நீதிபதிகளும் வழங்கியிருக்கும் இந்த ஒருமித்த தீர்ப்பை அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்போடு புரிந்துகொண்டு, இப்போது காட்டும் இதே நிதானத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நீதிபதிகளின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் வீண்போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, இந்துத்துவம் என்ற ஆயுதத்தை பாஜகவும் சங்கப் பரிவாரங்களும் வன்முறைக்கான தூண்டுகோலாக இனியும் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், போலி மதச்சார்பின்மை என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு, எல்லா மதங்களையும் ஒன்றுபோல் பார்க்கிற பக்குவத்தை எதிர்க்கட்சிகளும் பெற வேண்டும். நாளைய இந்தியா வேண்டுவது - அமைதியையும் வளர்ச்சியையும்தான். அதை எந்த ஒரு மதத்தை ஆதரிப்பதிலிருந்தோ எதிர்ப்பதிலிருந்தோ பெற்றுவிட முடியாது என்பது நிதர்சனம். அயோத்தியிலிருந்து அமைதி பரவட்டும்!


அயோத்தி தீர்ப்புஅயோத்திஅமைதியும் நீதியும்இரண்டு சமூகங்கள்பாபர் மசூதிபாஜகமதச்சார்பின்மைஇந்துக்கள்முஸ்லிம்கள்

You May Like

More From This Category

More From this Author