Published : 06 Aug 2015 09:15 AM
Last Updated : 06 Aug 2015 09:15 AM

ஒட்டுமொத்த நாட்டுக்காகவும் சிந்தியுங்கள்!

நாடு முழுவதற்கும் பொதுவாக ஒரே விகிதத்தில் சரக்கு, சேவை வரிகளை விதிக்கும் முயற்சியில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. 2016 ஏப்ரலிலிருந்து இதை அமல்படுத்த வேண்டும் என்று விரும்பும் மத்திய அரசு, மாநிலங் களிடம் பெறப்பட்ட ஆலோசனைகளின்படி சில திருத்தங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச் சரவைக் குழு கூடி, இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்குத் தடையாக இருக்கும் சில அம்சங்கள் குறித்து விவாதித்தது.

பொதுவான சரக்கு, சேவை வரி விதிக்கப்படுவதால் தங்களுடைய நிதி திரட்டும் சக்தி பறிக்கப்பட்டுவிடுவதாகக் கருதும் மாநில அரசுகளின் கவலையைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களால் வசூலிக்கப்படும் வரி வருவாய்க்கும், புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு கிடைக்கப்போகும் வரி வருவாய்க்கும் இடையில் வித்தியாசம் இருந்தால் அதாவது, வரி வருவாய் குறைந்தால் - 100% அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, எந்த மாநிலமும் பொது சரக்கு, சேவை வரி விதிப்பால் தங்களுடைய மாநிலத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று இனி வருத்தப்பட வேண்டியிருக்காது. அடுத்த அம்சம், பொருட்களை உற்பத்திசெய்யும் மாநிலங்கள் 1% கூடுதல் வரி விதித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை. இப்படி 1% கூடுதல் வரி விதிப்பதற்குப் பெயர் பொது வரி விதிப்பா, இது கூடாது என்று பல மாநிலங்கள் ஆட்சேபித்தன. அது நியாயம்தான். நாடு முழுவதற்கும் ஒரே வரி விகிதம் என்று அறிவித்துவிட்டுச் சில சலுகைகளை வழங்கினால் எப்படி அது பொது வரி விகிதமாக இருக்க முடியும்? ஆனால், உற்பத்தி மாநிலங்களின் வாதத்தையும் மத்திய அரசால் நிராகரிக்க முடியவில்லை. பொருள் உற்பத்திக்காகத் தாங்கள் செய்த செலவால் ஏற்பட்ட அடித்தளக் கட்டமைப்புகள்தான் உற்பத்திக்குப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. அந்தச் செலவுகளைச் செய்ததற்காகவாவது தங்களுக்குக் கூடுதல் நிதி ஆதாயம் வழங்கப்படக் கூடாதா என்பதுதான் அந்த மாநிலங்களின் கோரிக்கை. எனவே, அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டிருக்கிறது.

பொது சரக்கு, சேவை வரி என்ற கொள்கையே இந்தியா முழுக்க ஒரே வர்த்தக மண்டலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்தியாவுக்குள் மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்களில் வேறுபாடு இருப்பதால், சரக்குகளை விற்பதிலும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டுசெல்வதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன. இதைப் பற்றியெல்லாம் பலமுறை பேசித்தான் பொது சரக்கு, சேவை வரி விதிப்பதற்குக் கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.

காலத்துக்கேற்ற மாற்றங்கள் எல்லாத் துறைகளையும் போலவே பொருளாதாரத்துக்கும் அவசியம். இப்படியான விஷயங்களில் எல்லாக் கட்சிகளுமே கட்சி சார்பான அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர்த்துவிட்டு, பொதுவான கண்ணோட்டத்துக்கு வருவது முக்கியம். மாநில அரசுகள் ஒட்டுமொத்த தேசத்துக்காகவும் சிந்திக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கும் சூழலில், எல்லா மாநிலங்களும் சேர்ந்ததே தேசம்; எந்த முடிவும் மாநிலங்களின் உரிமைகள் - நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசும் நினைக்க வேண்டும். இது அடித்தளத்தில் இருந்தால் யாவும் வெற்றிகரமாக முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x