Published : 06 Nov 2019 07:18 AM
Last Updated : 06 Nov 2019 07:18 AM

சிறை நெரிசலுக்கு முடிவுகட்டுங்கள் 

இந்திய சிறைக்கூடங்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் நெரிசல் அதிகமாகிவருகிறது. தேசிய அளவில் இது 115% என்று தேசிய குற்ற ஆவணப் பதிவகம் வெளியிட்டுள்ள 2017-க்கான ‘இந்திய சிறைக்கூடத் தரவு’ தெரிவிக்கிறது. உத்தர பிரதேசம் (165%), சத்தீஸ்கர் (157.2%), டெல்லி (151.2%) ஆகியவற்றில் நிலைமை மோசம். தமிழ்நாடு இந்த விஷயத்தில் ஏறக்குறைய திருப்தி அடையலாம்.

கடந்த காலங்களிலேயே ஏராளமான புதிய சிறைச்சாலைகளைக் கட்டி நெரிசலைக் குறைத்திருப்பதால், தமிழ்நாட்டில் 61.3% அளவுக்கே கைதிகள் இருக்கின்றனர். புதிய சிறைச்சாலைகளைக் கட்டியதுடன் மட்டுமல்லாமல், தேவையின்றிக் கைதுசெய்து சிறையில் அடைப்பதும்கூட இங்கே குறைந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தில் புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அங்கே நெரிசல் நிலவுகிறது.

இங்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சிறைகளை வெறும் தண்டனைக் கூடங்களாகக் கருதும் ஒரு சமூகம், ஜனநாயக சமூகமாக இருக்க முடியாது. சீர்திருத்தும் கூடங்களாகவும் சிறைகள் இருக்க வேண்டும் என்றால், அங்கு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வெறுமனே கட்டிடங்கள் கட்டுவது வழியாக மட்டும் சரியாவது அல்ல இது; கைதிகளை அணுகும் முறையிலும் மாற்றம் வேண்டும்.

நம் சிறைகளில் உள்ள மோசமான விஷயம் என்னவென்றால், அங்குள்ளவர்களில் 68% பேர் விசாரணைக் கைதிகள் என்பதாகும். வழக்குகள் முடியாத அல்லது வழக்கு விசாரணையே தொடங்காத சூழலிலேயே தண்டனையை எதிர்கொள்பவர்கள் இந்தியச் சிறைகளில் அதிகம். இதற்கான முக்கியக் காரணம், பிணை வழங்கும் நடைமுறையில் உள்ள முரண்கள்தான். இந்திய சட்ட ஆணையமும்கூட இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்தால் ஏராளமான விசாரணைக் கைதிகள் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். அவர்களால் ரொக்கப் பிணையும் தர முடியாது, பிணையில் எடுக்க வேறு நபர்களின் உதவியையும் நாட முடியாது. இவர்களை விடுவிக்க சட்ட ஆணையம் சில யோசனைகளைக் கூறியிருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது வழக்கு நடந்து, அவருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலை இருந்து, அதில் அவர் மூன்றில் ஒரு பங்கை விசாரணைக் கைதியாகவே சிறையில் கழித்திருந்தால், விடுவித்துவிடலாம்.

ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சிறையில் இருக்க வேண்டிய குற்றமாக இருந்தால், தண்டனைக் காலத்தில் பாதிக் காலத்தை சிறையிலேயே விசாரணைக் கைதியாகக் கழித்திருந்தால் அவரையும் விடுவித்துவிடலாம். குற்றச்சாட்டுக்கு உரிய முழு தண்டனைக் காலத்தையும் ஒருவர் விசாரணைக் கைதியாகவே கழித்திருந்தால், அத்தனை ஆண்டுகளை அவருடைய தண்டனைக் காலத்திலிருந்து கழித்துக்கொள்ள பரிசீலிக்க வேண்டும் என்பது அதன் யோசனை. காவல் துறையினர் தேவையின்றி கைதுசெய்யக் கூடாது. நீதிபதிகளும் இயந்திரத்தனமாக அவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும்கூட அது சொல்கிறது. இவற்றையெல்லாம் அரசும் நீதித் துறையும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x