Published : 29 Oct 2019 08:13 AM
Last Updated : 29 Oct 2019 08:13 AM

தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள் 

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளும், நாடெங்கும் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனை கூட்டணியானது, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்திருக்கிறது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 161 தொகுதிகளை பாஜக கூட்டணியும் 98 தொகுதிகளை காங்கிரஸ்-தேசியவாதக் கூட்டணியும் வென்றிருக்கின்றன. ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வென்று, வெளியிலிருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக. காங்கிரஸ் 31 தொகுதிகளை வென்றிருக்கிறது. ஜன்நாயக் ஜன்தா 10 தொகுதிகளையும் வென்றிருக்கிறது.

வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக எழும் அலையைத் தாண்டி, இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. அதேநேரத்தில், அவர்களின் முழக்கங்கள், பேச்சுகள் ஏற்படுத்திய தோற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வெற்றி அல்ல இது. எதிர்க்கட்சிகள் இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை. ஏனென்றால், முறையாகத் திட்டமிட்டுக் கடினமாக உழைத்திருந்தால் அவை வென்றிருக்க வேண்டிய தேர்தல்கள் இவை.

அவநம்பிக்கையோடும், தலைமை பலம் ஏதுமற்ற நிலையில், மந்தமான தேர்தல் பிரச்சாரத்தினூடாகவுமே பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இத்தேர்தலை எதிர்கொண்டது. அதைத் தாண்டியும் அதற்குக் கணிசமான இடங்களைத் தந்திருக்கிறார்கள் மக்கள். அதேபோல, மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸுக்கும், ஹரியாணாவில் ஜன்நாயக் ஜன்தா கட்சிக்கும் கணிசமான இடங்களை மக்கள் தந்திருப்பது பிராந்தியக் கட்சிகளின் இடத்தை இந்தியாவில் எவரும் அழித்துவிடலாகாது என்பதையே சொல்கிறது.

நாடெங்கும் 51 சட்டமன்றத் தொகுதிகளிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் நடந்த தேர்தல்களுக்கான முடிவுகளும் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக கூட்டணி வென்றிருக்கிறது. ஏனைய 25 தொகுதிகளை எதிர்க்கட்சிகள் வென்றிருக்கின்றன. அதுபோலவே இரு மக்களவைத் தொகுதிகளையும் எதிர்க்கட்சிகள் வென்றிருக்கின்றன. பொருளாதார மந்தநிலை இந்த அரசாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தபோதிலும், அதைத் தாண்டியும் பாஜகவால் வெல்ல முடிகிறது.

அதேசமயம், அது வெல்ல முடியாத சக்தி அல்ல எனும் இரு செய்திகளையும் இது வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது. தேசியவாத ஆயுதத்தை மட்டும் கையில் ஏந்தி, பிரதமர் மோடியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி பாஜக தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதாகவும், அதேபோல மோடி எதிர்ப்பு அரசியலை மட்டுமே பேசி எதிர்க்கட்சிகள் பயணிக்க முடியாது. மாற்றுக் கதையாடல் தேவை என்பதாகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை இவை.

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுக வென்றுள்ளது. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவினாலும் அதை அறுவடை செய்துகொள்ளும் வகையில், எதிர்க்கட்சியான திமுகவாலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸாலும் செயல்பட முடியவில்லை. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முனையும் அதிமுகவையும் மக்கள் கவனிக்கிறார்கள்.

வெற்றி கிடைத்துவிட்ட துணிச்சலில், மீண்டும் குடும்ப அரசியலில் குதூகலமாகக் குளிக்க இறங்கும் திமுகவையும் மக்கள் கவனிக்கிறார்கள் என்பதாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், ஆளுங்கட்சிகளிடமும் எதிர்க்கட்சிகளிடமும் மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான், மக்களுக்காகப் பணியாற்றுங்கள்; புதிய சிந்தனைகளுடன் செயலாற்றுங்கள் என்பதே அதுவாகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x