Published : 25 Oct 2019 08:37 AM
Last Updated : 25 Oct 2019 08:37 AM

நஞ்சற்ற பாலை உறுதிப்படுத்துவது அரசின் கடமை

பால் பாதுகாப்பு மற்றும் தரத்துக்கான விரிவான கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபருக்கும் இடையே சேகரிக்கப்பட்ட 6,432 மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த மாதிரிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட 1,100 ஊர்கள், நகரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. இந்த ஆய்வில் 93% மாதிரிகள் பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்டிருந்தாலும் கூடுதலாகக் கிடைத்திருக்கிற தகவல்கள் சங்கடத்தைத் தருகின்றன.

இந்த ஆய்வு பொதுவான 13 கலப்படங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், அஃப்ளேடாக்ஸின் எம்1, நோயெதிர்முறிகள் (antibiotics) ஆகிய நச்சுப் பொருட்களைக் கண்டறிவதற்காக நடத்தப்பட்டது. 12 மாதிரிகள் மட்டும் கலப்படமானவையாகவும் நுகர்வுக்குப் பாதுகாப்பற்றவையாகவும் இனம் காணப்பட்டுள்ளன.

இந்தக் கலப்பட மாதிரிகள் தெலங்கானா (9), மத்திய பிரதேசம் (2), கேரளம் (1) ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. இந்தக் கலப்பட மாதிரிகளில் உள்ள கலப்படங்களும் நச்சுப்பொருட்களும் உடல் நலத்துக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்துபவையாக இனம் காணப்படவில்லை.

எனினும், 368 மாதிரிகளில் அஃப்ளேடாக்ஸின் எம்1 மிச்சங்கள் அனுமதிக்கப்பட்ட ஒரு கிலோவுக்கு 0.5 மைக்ரோகிராம் என்ற அளவைத் தாண்டியும் காணப்பட்டிருக்கின்றன. அஃப்ளேடாக்ஸின் எம்1 உடன் ஒப்பிடும்போது நோயெதிர்முறிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 77 மாதிரிகளில் காணப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரிகள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெறப்பட்டவை.

தரப்படுத்தப்படாத பாலைவிடத் தரப்படுத்திய பாலில் அஃப்ளேடாக்ஸின் எம்1 அதிகமாக இருக்கிறது. பாலில் இந்த நச்சுப்பொருள் கலந்திருப்பது மதிப்பிடப்படுவது இதுவே முதன்முறை. இந்த அஃப்ளேடாக்ஸின் எம்1 அதிக அளவில் காணப்பட்டது தமிழ்நாடு (551 மாதிரிகளில் 88), டெல்லி (262-ல் 38), கேரளம் (187-ல் 37) ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில்தான்.

அஃப்ளேடாக்ஸின் எம்1 மனிதர்களுக்குப் புற்றுநோயை விளைவுக்கும் சாத்தியம் கொண்டது. தற்போதைய ஆய்வானது பாலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதால் பால் பெருட்களில் எந்த அளவுக்கு இந்த நச்சுப்பொருள் இருக்கிறது என்பது தெரியவில்லை. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பால்தான் பிரதான ஊட்டப்பொருள் என்பதால் அஃப்ளேடாக்ஸின் எம்1 கலந்திருப்பதை மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாலிலும் பால் பொருட்களிலும் அஃப்ளேடாக்ஸின் எம்1 கலந்திருப்பது என்பது விலங்குகளுக்குத் தீனியாக வழங்கப்படும் தானியங்கள் மிகவும் தரம் குறைந்தவையாக இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆகவே, தானிய அறுவடைக்கு முன்னும் பின்னும் அந்த நச்சுப்பொருளைக் குறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

இத்துடன் அஃப்ளேடாக்ஸின் எம்1-ஐப் பரிசோதிப்பதற்கான வசதிகளையும் அரசு ஏற்படுத்த வேண்டும். பால், பால் பொருட்களின் அஃப்ளேடாக்ஸின் கலந்திருக்கிறது என்பது சாதாரண விஷயம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கும் விஷயம். அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடலாகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x