செம்பரம்பாக்கம் வெளிப்படுத்தும் அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் வெளிப்படுத்தும் அபாய எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை மாநகரம் மிகப் பெரும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது என்பது பழங்காலத்துக் கதை அல்ல; இரண்டு மாதங்களுக்கு முன்புவரைகூட சென்னையின் தண்ணீர்த் தேவையை எதிர்கொள்ள முடியாமல் குடிநீர் வாரியம் தத்தளித்துக்கொண்டிருந்தது. சென்னையில் சராசரி ஆண்டு மழைப்பொழிவும் குறைந்திருந்த நிலையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான வறட்சியை எதிர்கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டோ தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக ஒரு சொட்டு மழைகூடப் பெய்யாத கடும் வறட்சி. சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் மற்றும் ஆரணி, கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகள் வறண்டுபோனதாலும், நிலத்தடி நீர்மட்டம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்ததாலும் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக அல்லோலகல்லோலப்பட நேர்ந்தது. இதையெல்லாம் எதிர்கொண்ட பிறகும் மழைநீரையெல்லாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

எழுபத்தைந்து லட்சம் சென்னைவாசிகளுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 830 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) குடிநீர் விநியோகிக்கிறது ‘சென்னை பெருநகர நீர் வழங்கல் வாரியம்’. இதில் மேற்பரப்பு நீரின் பங்கு மட்டும் 65% என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் பங்களிப்பு சென்னையைப் பொறுத்தவரை மிகவும் அத்தியாவசியமானது. இந்த நான்கு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 1,125.7 கோடி கன அடி. கடந்த ஜூன் 2 அன்று இந்த நான்கு ஏரிகளில் இருந்த மொத்த நீரின் அளவு வெறும் 5.8 கோடி கன அடிதான். அதாவது, மொத்தக் கொள்ளளவில் 0.51%.

சென்னையில் இப்பருவத்தில் 170.3 மிமீ அளவு மழை பொழிந்துள்ளது. இருந்தும், சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. ‘24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் வெறும் 1.69 அடிதான் நிரம்பியிருக்கிறது; பூண்டி, வீராணம் ஏரிகளிலும் நிலைமை திருப்தியில்லை’ என்று வெளியாகியிருக்கும் செய்திகள் அதிரவைக்கின்றன.

வறட்சியோடு மட்டுமல்ல, பெருவெள்ளத்தோடும் தொடர்புடைய செய்தி இது. வெள்ளத்தையும் வறட்சியையும் தங்கள் தவறுகளால் அடுத்தடுத்து மக்கள் மீது சுமத்திய அதிமுக அரசு, இன்னும் பருவமழைக்குத் தயாராகவில்லை என்பது மோசமான நிர்வாகம். நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.1,200 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டதே என்னவாயிற்று? சென்னைக்கு நீராதாரமான ஏரிகளே புதர் மண்டிக் கிடக்கின்றன என்றால், தமிழ்நாட்டின் பிற பகுதிகளின் நிலைமை என்ன?

சென்னை கடுமையான வறட்சியை எதிர்கொண்ட சமயத்தில், “மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளில் மக்கள் அக்கறை காட்ட வேண்டும். மழைநீரை முறையாகச் சேமித்தால் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்; நீர்வளமும் அதிகரிக்கும்” என்று மக்களுக்கு உபதேசம் செய்கிறது அரசு. தன்னுடைய கடமையில் அது சரியாக இருக்கிறதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in