

விடியோகான் மோசடி, நீரவ் மோடி மோசடி, விஜய் மல்லையா மோசடி என்று அடுத்தடுத்து மோசடிகளைக் கேள்விப்பட்டு கலவரப்பட்ட மக்கள் நிம்மதி அடைய முடியாதபடிக்கு இப்போது பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி அம்பலமாகியிருக்கிறது.
தென்னிந்திய தனியார் வங்கி ஒன்றும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதான செய்தி மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, வங்கிகள் மீது மக்களுக்குக் கடும் அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், “இந்திய வங்கித் துறை குறித்து அச்சம் வேண்டாம். நிதி நிலைமை வலுவாக இருக்கிறது. வங்கித் துறையும் உறுதியாக இருக்கிறது” என்று இந்திய ரிசர்வ் வங்கி இம்மாதத் தொடக்கத்தில் உறுதியளித்திருக்கிறது.
நீண்ட காலத்துக்குக் கடன் தேவைப்படும் கோரிக்கை மனுக்களைச் சரியாகப் பரிசீலிப்பதில் வங்கி நிர்வாகத்துக்குள்ள போதாமை, அந்தப் பெருந்தொகை உரிய நோக்கத்துக்கு மட்டும் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வழிகள் நிர்வாகிகளுக்கு இல்லாதது போன்றவை வாராக் கடன்கள் அதிகரிக்க முக்கியக் காரணங்களாகின்றன. 2002 முதல் 2009 வரையில் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் அதிகம் முதலீடுசெய்ய மத்திய அரசு முக்கியத்துவம் தந்தது. ஆனால், அதற்கான நிதிக்குத் தனி ஏற்பாடுகள் செய்யாமல் அரசு வங்கிகளை நாட விட்டுவிட்டது. இதுவும் வாராக் கடன்கள் பெருக முக்கியமான காரணம்.
இந்தியாவில் வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்களின் மதிப்பு ரூ.120 லட்சம் கோடி. அதில் ரூ.33.7 லட்சம் கோடி மதிப்புள்ள டெபாசிட்கள் காப்புறுதி செய்யப்பட்டவை. இது மொத்த டெபாசிட்டில் 28%. சர்வதேச அளவில் இது 20% முதல் 30% வரை உள்ளது. டெபாசிட்களைக் காப்புறுதி செய்யத் தரப்படும் தொகை மட்டுமே ரூ.93,750 கோடி. போலவே, வாராக் கடன் அளவு மொத்தக் கடனில் 3%-லிருந்து 13% ஆக உயர்ந்திருக்கிறது.
வங்கிகள் வழங்கிய தொகையில் வாராக் கடன்களில் ரூ.14.22 லட்சம் கோடியை இந்திய மக்களின் வரிப் பணத்திலிருந்து அரசுகள் எடுத்து ஈடுகட்டியிருக்கின்றன. இவ்வளவு பெரும் தொகை நஷ்டமாகாமல் இருந்தால் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேளாண்மை, தொழில் துறை ஆகியவற்றுக்கு எவ்வளவு முதலீடு கிடைத்திருக்கும்? எவ்வளவு வரிச்சுமையை அரசு குறைத்திருக்கலாம்? இந்தப் பின்னணியில்தான் மக்களுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, வங்கிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதற்கு வங்கி மோசடிகளைத் தடுப்பது, வாராக் கடன்களைக் குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை அரசு கடுமையாக எடுக்க வேண்டியது அவசியம். அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் என்று எல்லா இடங்களிலும் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் நிலவுவது இந்திய ரிசர்வ் வங்கியின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக்கூடும். அப்படி நேர அனுமதித்துவிடக் கூடாது.