

மதுரையில் பள்ளிக்கூட வகுப்புகள் முடிந்து, பேருந்துக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கிடையே எழுந்த வாய்த் தகராறு வன்செயலில் முடிந்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை, அவனுடன் படிக்கும் சக மாணவனே பிளேடால் முதுகைக் கிழித்திருக்கிறான். இந்தக் கோபத்துக்கும் வன்மத்துக்கும் சாதிய உணர்வே காரணமாக இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக இருக்கிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய நஞ்சு, நம்மை அடுத்து வரும் தலைமுறைக்கு மிக இளம் வயதிலேயே புகட்டப்படுகிறதோ என்ற கவலையையும் வருத்தத்தையும் இதுபோன்ற நிகழ்வுகள் உண்டாக்குகின்றன.
சமீப காலமாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய உணர்வுகள் அதிகரித்துவருவதையும் அதன் அடிப்படையில் வன்செயல்கள் நடந்தேறுவதையும் பார்க்க முடிகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களது சாதியை வெளிக்காட்டிக்கொள்ளும் வகையில், கையில் வண்ணக் கயிறுகளைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் பள்ளிக்கூடங்களுக்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது. பள்ளி மாணவர்கள் தங்களுடைய சாதியை வெளிப்படுத்தும் வகையில் அடையாளங்களை அணியக் கூடாது என்றும் கல்வித் துறை அதிகாரிகள் அதைச் சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், மதச் சின்னங்களை அணிவதற்கு அரசு தடைவிதிக்க முயற்சிக்கிறது என்று சில அரசியல் தலைவர்கள் எழுப்பிய கேள்விகளால் அந்த முயற்சியின் பின்னால் உள்ள நோக்கம் கண்டுகொள்ளப்படாமலேயே போனது.
பள்ளி மாணவர்களிடம் எழுந்த சாதாரண சண்டைக்கு சாதிய முலாம் பூசப்படுகிறது என்று இத்தகைய சம்பவங்களைக் கடந்துபோய்விட முடியாது. தலித் ஊழியர் சமைக்கும் சத்துணவை மாணவர்கள் புறக்கணிக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பள்ளி மாணவர்களிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பரவியுள்ள சாதிய உணர்வுகளுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சாதிய அமைப்புகள் என ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.
பள்ளிப் பாடப் புத்தகங்களில் தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சாதிய ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்காகப் பாடுபட்ட சீர்திருத்தவாதிகளைப் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. என்றாலும்கூட அவையெல்லாம் பள்ளி மாணவர்களின் மனதில் எந்த நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதையே இத்தகைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பள்ளிக்கூடம் என்பது ஒரு மாணவர் தன்னுடைய சமூக வாழ்க்கையைத் தொடங்குகிற இடம். எதிர்பால் இனத்தவர், வெவ்வேறு சூழல்களில் பிறந்து வளர்ந்தவர்கள், வெவ்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் ஆகியோருடன் பழகித் தோழமையுணர்வை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக் களம். பாடத்திட்டங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என்ற வட்டங்களுக்குள் சிக்காமல், மாணவர்களைத் தகுதியான குடிமக்களாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதைப் போலவே, குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் எப்படிப் பொதுச் சமூகத்துடன் உறவைப் பேணி வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தும் பெருங்கடமையும் இருக்கிறது. இந்தக் கடமைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அரசும் உணர்ந்து நடந்துகொண்டால்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.