

சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகுதியிழப்புச் சூழல் ஏற்பட்டது. இதிலிருந்து அவரை விடுவிக்கும் வண்ணம், மத்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கக் காலத்தைக் குறைத்திருப்பது மிக மோசமான முன்னுதாரணம். ஒரு வழக்கு தொடர்பாக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிக்கப்படும் கால அளவைக் குறைக்கவோ, ரத்துசெய்யவோ 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. அதைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும், இது நியாயமான அணுகுமுறை அல்ல.
1996-97-ல் சிக்கிம் மக்களுக்குக் கறவை மாடுகள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.9.5 லட்சத்தைக் கையாடல் செய்ததாக தமாங் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்குச் சென்ற அவர் 2018 ஆகஸ்ட் 10-ல் விடுவிக்கப்பட்டார். ஆனால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் முதல்வராகப் பதவி வகிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிக்கிம் முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் வென்ற ‘சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா’ கட்சியின் பேரவைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவாக, ஆளுநர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்தான், அவர் தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகினார். ‘ஊழலுக்கு எதிரான சட்டப்படி எவ்வளவு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கக் கூடாது என்ற சட்டத் திருத்தம் 2003-ல்தான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றிய சட்டத்தைக் கொண்டு தண்டனை விதிக்கக் கூடாது’ என்று அவர் கோரினார்.
ஊழலைச் சகித்துக்கொள்ளக் கூடாது என்ற உணர்வுக்கு எதிராக இருக்கிறது, பிரேம் சிங் தமாங்கின் தண்டனைக் காலத்தைக் குறைத்த ஆணையத்தின் செயல். மத்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கண்ணசைவுக்கு ஏற்பச் செயல்படுகிறது என்று பல முன்னுதாரணங்களைக் காட்டி எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. சிக்கிமில் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் பாஜக தேர்தல் கூட்டணிகொண்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் மீண்டும் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. தேர்தல் ஆணையம் இத்தகைய தவறான முன்னுதாரணத்தை உருவாக்கலாமா? அதுவே சந்தேகத்துக்கான சூழல் தன்னைச் சுற்றிப் பரவ அனுமதிக்கலாமா?