

இந்திய அரசு எவ்வளவு சகிப்புத்தன்மையற்று இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருப்பதோடு, வரவர நாம் எவ்வளவு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கே சுட்டிக்காட்டியிருக்கிறது கிறிஸ்டினா மேத்தா விவகாரம்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியரான கிறிஸ்டினா மேத்தா, ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்புக்கான ஆய்வில் ஈடுபட்டுவந்தவர். காஷ்மீரில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன, அங்குள்ள குடிமைச் சமூகம் என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற ஆய்வில் இறங்கியதன் தொடர்ச்சியாக, அவசர அவசரமாக, வலுக்கட்டாயமாக அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது இந்திய அரசு.
கிறிஸ்டினா மேத்தா ஏதோ வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலோ, காஷ்மீர் விவகாரம் சர்வதேசக் கவனம் பெற்ற ஒரு விவகாரம் என்பதாலோ நடந்திருக்கும் விஷயம் அல்ல இது. காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு - அங்குள்ள சூழலை, உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் - நுழையும் எவரும் எதற்கும் துணிந்துதான் நுழைய வேண்டியிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொள்ளும் விவகாரங்கள், மாவோயிஸ்ட்டுகள் விவகாரம் என்று ஆயுதப் படைகள் தொடர்பான எல்லா விவகாரங்களிலும் உள்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமேகூட நிலைமை இதுதான். காட்டு வேட்டை என்ற பெயரில் தம் சொந்த மக்களையே ஆயுத வேட்டையாடும் படைகளை எதிர்த்த டெல்லி பேராசிரியர் சாய்பாபாவை 14 மாதங்களாகச் சிறையில் வைத்திருந்தோமே… அது வெளிப்படுத்துவதும் இதே அணுகுமுறைதானே? “என்னை முடக்க அரசு கையாண்ட விதமே இந்தக் கைது” என்கிறார் பேராசிரியர் சாய்பாபா. கூர்ந்து கவனித்தால், கிறிஸ்டினா மேத்தாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கும் சாய்பாபாவைத் தூக்கி சிறைக்குள் வைப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது?
அடிப்படை ஒன்றுதான், சகிப்பின்மையும் காட்டமும் நாளுக்கு நாள் நம் அரசிடம் அதிகரிக்கிறது. மேலே அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து வெளிப்படும் இந்த மனோபாவம், கீழே கடைசியாக ஒரு விசாரணைக் கைதியை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் உள்ளூர் காவலர் வரை நீடிக்கிறது. ‘நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதுவே உண்மை; அதைத் தாண்டிய உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை’ - உண்மைக்கோ விமர்சனங்களுக்கோ முகம் கொடுக்க மறுக்கும் மனோபாவம் இது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நாம் பெருமையாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டின் உறுதித் தன்மை எதில் இருக்கிறது என்றால், அது உண்மைக்கு எவ்வளவு தூரம் முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது; விமர்சனங்களை எவ்வளவு ஆக்க பூர்வமாக எதிர்கொள்கிறது என்பதில்தான் இருக்கிறது. ஆனால், நாளுக்கு நாள் இந்த விஷயத்தில் நாம் மோசமாகிக்கொண்டே இருக்கிறோம்!