Published : 20 Jul 2015 08:48 AM
Last Updated : 20 Jul 2015 08:48 AM

இது நிரந்தரம் அல்ல!

கிரேக்கத்தின் தலை தப்பியிருக்கிறது தற்காலிகமாக. ஆனால், இதற்காக யாரும் சந்தோஷப்பட முடியாது. சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயம் உள்ளிட்ட ஐரோப்பிய சமூகத்தின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்று, தற்காலிகமாகக் கடன் தவணையை உடனே செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றிருக்கிறது கிரேக்கம். அத்துடன் பணப் பற்றாக்குறையால் கிட்டத்தட்ட செயலற்ற நிலைக்கு வந்துவிட்ட பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட சுமார் ரூ. 5,76,500 கோடி கடனுதவியும் பெற்றிருக்கிறது.

கிரேக்கத்தின் பொருளாதார நிலைமை மோசமடைந்ததால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் வாங்கிய கடனுக்கு அசல், வட்டி என்ற ஆண்டுத் தவணையைக்கூட திருப்பிச் செலுத்த பணம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே உள்ள ரூ. 16,80,000 கோடிக்கான தவணைத் தொகையை அடைக்க முடியாததோடு புதிதாகக் கடன் வாங்கினால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. எனவே, பொருளாதார விவகாரங்களில் பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றின் அறிவுரைப்படி நடக்க ஒப்புக்கொண்டு இந்தக் கடனைப் பெற்றிருக்கிறது. கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ், பொதுத் தேர்தலுக்கு முன்னால் பேசிய பேச்சுகளையும் உறுதிமொழிகளையும் ஓரங்கட்டிவிட்டு, நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

ஐரோப்பிய சமூகம் - கிரேக்கம் இடையிலான ஒப்பந்தத்துக்குப் பின், “கிரேக்கம் கடுமையாகப் போராடி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். அத்துடன் தனது இறையாண்மையையும் பாதுகாக்கும்” என்று பிரதமர் சிப்ரஸ் கூறியிருக்கிறார். “கிரேக்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பரஸ்பரம் நல்ல நம்பிக்கை நிலவ வேண்டும்” என்று இந்த உடன்பாட்டுக்குப் பிறகு ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியிருக்கிறார். “இதுதான் கிரேக்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் போக வேண்டிய சுமுகமான பாதை” என்று பிரெஞ்சு அதிபர் பிராங்குவா ஹொல்லாந்து கருத்து தெரிவித்துள்ளார். எல்லாம் சம்பிரதாய வார்த்தைகளாகவே தோன்றுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க மாட்டோம் என்று கூறியே சிப்ரஸ் ஆட்சியைப் பிடித்தார். இந்தப் பிரச்சினை முற்றியதும் கிரேக்க மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பிலும், கிரேக்க மக்கள் ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றே வாக்களித்தனர். ஆனால், சிப்ரஸ் அரசு அப்படியே பல்டி அடித்திருக்கிறது.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போதே கிரேக்கத்தின் வீழ்ச்சி அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. கடன் வாங்கியது, வரவை மீறிச் செலவு செய்தது என்பதையெல்லாம் தாண்டி, அந்த நாட்டின் வரவு - செலவுத் திட்டங்களைத் தயாரித்தவர்கள் உண்மையான நிதி நிலையை மக்கள் அறியாதபடிக்கு மறைத்து நாடகமாடியதும் கிரேக்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது. 2009 அக்டோபரில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பாப்பாண்ட்ரூ, இந்தத் தில்லுமுல்லுகளை இனியும் அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டபோது நிலைமை மேலும் மோசமானது. கிரேக்கம் திவாலாகிறது எனும் முடிவுக்கு அப்போதே வந்துவிட்டது சர்வதேசம். கடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள மேலும் மேலும் கடன் வாங்குவது ஒருபோதும் தீர்வாவதில்லை. சிக்கல், தாம் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையா - கடனா என்பதை உணராதவரை கிரேக்கத்துக்கு விடிவு இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x