Published : 18 Sep 2019 10:03 AM
Last Updated : 18 Sep 2019 10:03 AM

இந்தியைத் திணிக்கும் முயற்சி தேச ஒற்றுமையைக் குலைக்கும்  

இந்தியால் மட்டும்தான் இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது ஜீரணிக்க முடியாதது. இந்தி மட்டுமே உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும் என்று அவர் பேசியிருப்பது ஏனைய இந்திய மொழிகளையெல்லாம் சிறுமைப்படுத்துவது என்பதில் சந்தேகமே இல்லை. இந்தி மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்ட மொழி, தேசிய மொழி, இணைப்பு மொழி, கட்டாய நிர்வாக மொழி என்றெல்லாம் தொடர்ந்து மற்ற மொழி பேசுபவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தால் வேண்டாத விளைவுகளைத்தான் அது ஏற்படுத்தும்.

இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்வதைக் குறித்த தனது ஆட்சேபத்தையும் ட்விட்டரில் பதிவுசெய்திருக்கிறார் அமித் ஷா. ஆங்கிலம் என்பது அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், சட்டம், மெய்யியல் என்று எத்தனையோ கலைகளையும் பாடங்களையும் இந்தியர்கள் படிக்கப் பேருதவியாக இருக்கிறது. இந்தியா இப்போது தலைசிறந்து விளங்கும் தகவல்தொழில்நுட்பத் துறையின் வெற்றிக்குக் காரணமே இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியர்களின் ஆங்கில அறிவுதான். இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், பொறுப்பான பதவியில் இருப்பவர் பேசியிருப்பது வியப்பாக இருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமய்யா, எச்.டி.குமாரசாமி ஆகியோரும் இதைக் கண்டித்திருப்பதுடன் விரும்பாதவர்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியே இது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அமித் ஷா இப்படி அபத்தமாகப் பேசியிருக்கிறார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று தங்களுடைய சித்தாந்தங்களை மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க ஆட்சியாளர்கள் விரும்புவதைப் போலத் தெரிகிறது. இந்தியாவில் பல மொழிகள், பல மதங்கள், பல இனங்கள் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் வாழ்ந்துவருகின்றனர். ஒற்றுமைக்கு எது வழி என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருப்பதைப் போலவும் அது இந்தி மூலம்தான் சாத்தியம் என்பதைப் போலவும் உள்துறை அமைச்சரும் அவருடைய கட்சிக்காரர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேசுவதை நிறுத்திக்கொள்ளட்டும்.

இந்தி தவிர, பிற மொழி பேசுவோர் அவரவர் தாய்மொழியையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அதே உரையில் அமித் ஷா பேசியிருக்கிறார். அவர் கண்டறிந்து சொல்வதற்கு முன்னதாகவே எல்லா மாநிலங்களும் அதைத்தான் செய்கின்றன. இந்தியை உயர்த்திப் பேசிய அதே மேடையில், ஆங்கிலத்தைப் புறக்கணிக்க அல்லது பயன்பாட்டைக் குறைக்க அவர் சொல்லியிருக்கும் யோசனை நகைப்புக்கிடமானது. இந்தியாவின் தனித்தன்மை எது, மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பது எது என்பதை அமித் ஷா சரியாகப் புரிந்துகொண்டு பேச வேண்டும். அது நிச்சயம் இந்தி அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x