Published : 17 Jul 2015 08:51 AM
Last Updated : 17 Jul 2015 08:51 AM

பாசனநீர் மேலாண்மையில் சீர்திருத்தம் அவசியம்

வேளாண் சாகுபடிக்குத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதை நிர்ணயிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இது தொடர்பான சீர்திருத்தத்தை இனியும் தள்ளிப்போட முடியாது. ஒவ்வொரு ஹெக்டேரிலும் அதிகபட்சம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து நிர்ணயிக்க வேண்டும் என்று ‘வேளாண் உற்பத்தி, கொள்முதல் விலைக்கான தேசிய ஆணையம்’ பரிந்துரை செய்திருப்பதைத் தீவிர மாகச் செயல்படுத்த வேண்டும். நெல், கரும்பு சாகுபடிக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ நெல் விளைய 3,000 முதல் 5,000 லிட்டர் வரையில் தண்ணீர் தேவை. வரம்பில்லாமல் தண்ணீரைச் செலவிடுவதால் சூழலியலிலும், வாழ்வாதாரங்களிலும் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் வாய்க் கால்கள் மூலமும் நிலத்தடி நீர் உதவிகொண்டும் அதிகபட்ச சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அங்கு ஒரு கிலோ அரிசிக்கு 5,300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.

1997 முதல் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைப் பல மாநில அரசுகள் அறிமுகப்படுத்தின. இதனால் பொது நீர்நிலைகள் மீதான அக்கறை தொலைந்து, நிலத்தடி நீர் விவசாயம் பிரதானமானது. நிலத்தடி நீர்ச் சாகுபடியால் பல மாநிலங்களில் சாகு படிப் பரப்பளவு லட்சக்கணக்கான ஹெக்டேர்களுக்கு அதிகரித்தது உண்மை. அதே வேளையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் கீழே சென்றது. நிலத்தடி நீரை அதிகம் கோரும் பயிர்களுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்களின் சாகுபடி குறித்து நாம் சிந்திக்கவில்லை. ஆக, நிலத்தடி நீராதாரம் கண் முன்னே அழிவதை யாவரும் கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்கிறோம். இன்னும் எவ்வளவு காலம் இப்படிப் பார்த்திருப்பது?

தண்ணீர்த் தேவை குறைவாக உள்ள மாற்றுப் பயிர் சாகுபடி, சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்புப் பாசனம், பயிர்களின் வேர்களுக்கு மட்டும் நிலத்தில் பதிக்கப்படும் குழாய்கள் மூலம் நேரடிப் பாசனம் என்று மாற்று வழிமுறைகளை நாம் கையாளும் நேரம் வந்துவிட்டது. இந்த மாற்று முறைகளை வேளாண் ஆராய்ச்சிக்கான இந்தியப் பேரவையும் அங்கீகரித்துள்ளது. இவற்றால் மட்டும் 30% அளவுக்குத் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் தண்ணீரைச் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் கையாள விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘பானி பஞ்சாயத்து’ அமைப்புகள் வலுவாகச் செயல்படு கின்றன. அவை மழை நீர் சேகரிப்பு, நீர்நிலைகளைத் தூர் வாரிப் பராமரித்தல் போன்றவற்றில் அரசுக்கு உதவுகின்றன.

வானம் பார்த்த பூமியில்தான் பெரும்பாலானோர் சாகுபடி செய்கின்றனர். மழை பொய்த்தால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நிலத்தடி நீரைக் கொண்டு தண்ணீர் பெறலாம் என்று சராசரியாக லட்சம் ரூபாய் வரை செலவிட்டு ஆழ்துளைக் கிணறு தோண்டி தண்ணீர் பெறுகின்றனர். ஓரிரு ஆண்டுகள் கழித்து நீர்மட்டம் மேலும் கீழிறங்கியவுடன் தண்ணீரின்றிப் பயிர்கள் காய்கின்றன. இதனால் தண்ணீர் செலவே அதிகமாகிறது. தோட்டப் பயிர்களுக்கு மாறுவதாக இருந்தால் கடன் உதவி, விளைச்சலைச் சந்தைப்படுத்தும் வசதி போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். இப்படி ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம்தான் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் புத்துயிர் ஊட்ட முடியும், நிலத்தடி நீரையும் காப்பாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x