செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 07:58 am

Updated : : 12 Sep 2019 07:58 am

 

பொருளாதார மந்தநிலையை உடைத்து நொறுக்க உறுதியான ஊக்க நடவடிக்கைகள் தேவை

economy-crisis

சரிந்துகொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம் இப்போது தடுமாறத் தொடங்கியுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலையிழப்புச் செய்திகள் கேட்கத் தொடங்குகின்றன. பெரிய நிறுவனங்களின் விடுமுறை அறிவிப்புகள் சிறு நிறுவனங்களில் பீதியை உண்டாக்குகின்றன. வெளியாகும் புள்ளிவிவரங்கள் எவ்வளவு விரைந்து அரசு செயலாற்ற வேண்டும் என்பதைச் சுட்டுகின்றன.

ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) ஐந்தாவது தொடர் காலாண்டில் 5% ஆகக் குறைந்துள்ளது. பொருட்களின் தேவைக்கு முக்கியக் காரணமாக விளங்கும் தனிநபர் நுகர்வுச் செலவு முந்தைய காலாண்டில் 7.2% ஆக இருந்தது இந்தக் காலாண்டில் 3.1% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது 7.3% ஆக இருந்தது. தொழில் முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கும் சேமிப்பு வெறும் 4% மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் அது 13.3% ஆக இருந்தது. நிதியாண்டின் முதல் காலாண்டில் கட்டுமானத் துறையில் நிகர மதிப்புச் சேர்ப்பு 5.7% ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.6% ஆக இருந்தது. கார்கள் தொடங்கி பிஸ்கட்டுகள் வரை கேட்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது. உற்பத்தித் துறையில் நிகர மதிப்புச் சேர்ப்பு எட்டாவது காலாண்டில் வெறும் 0.6% ஆக இருக்கிறது.

நிலைமை எவ்வளவு மோசமாகிவருகிறது என்பதை மத்திய அரசு உணராமல் இல்லை என்பதை அது சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன. அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க வரி விதிப்பில் சலுகை, மோட்டார் வாகனத் துறையில் விற்பனை வீழ்ச்சியைத் தடுக்க சில நடவடிக்கைகள், அரசுடைமை வங்கிகளை இணைத்து பெரிதாக வங்கிகளை உருவாக்குவதற்கான அறிவிப்பு இந்த விஷயங்களெல்லாம் அரசின் அக்கறைகளை வெளிக்காட்டினாலும், உருவாகிவரும் பாதிப்பின் தீவிரத்தை எதிர்கொள்ள இவை எதுவும் போதாது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவிலும் பொருளாதாரம் சுணங்கும் நாட்களில் இந்தியா தனக்குத்தானே தேடிக்கொண்ட பிரச்சினைகளும் சேர்ந்தே இன்றைய சூழலை உருவாக்கியிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி குறித்து நுகர்வோருக்கு நம்பிக்கை குன்றியிருப்பதால், தேவைகளுக்கேற்ப பொருட்களை வாங்குவதை ஒத்திப்போடுகின்றனர் அல்லது குறைத்துக்கொள்கின்றனர் என்று ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை அறிக்கை சொல்லியிருப்பதை இங்கே குறிப்பிடலாம். ஆக, மேலிருந்து கீழே வரை மீண்டும் நம்பிக்கையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. பெரிய முடிவுகள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள், தொழில் துறையினர், பொருளாதார நிபுணர்கள் என்று எல்லாத் தரப்புகளுடனும் அரசு ஆலோசனை கலக்க வேண்டும்; தவறு என்று தெரியவரும் முடிவுகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

பொருளாதார மந்தநிலைஊக்க நடவடிக்கைகள்இந்தியப் பொருளாதாரம்வேலையிழப்புச் செய்திகள்தலையங்கம்Economy crisis
Popular Articles

You May Like

More From This Category

More From this Author