செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 08:17 am

Updated : : 09 Sep 2019 08:17 am

 

பிரதமரின் முனைப்பு நல்லது... ஆனால், ‘ஜி7’ போக்கு உலகத்துக்கு நல்லதல்ல!

headlines-about-g7

பிரான்ஸில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ‘ஜி7’ தலைவர்களின் உச்சி மாநாடு கூட்டுப் பிரகடனம்கூட இல்லாமல் நடந்து முடிந்தது நல்ல செய்தி அல்ல; பருவநிலை மாறுதல், மின்னணு தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக நடந்த இந்த மாநாட்டில் நடந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், இந்தியா தன் தரப்பை வலுப்படுத்திக்கொள்ள இந்த மாநாட்டை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது மட்டும்தான்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகம் முழுவதையும் மிரட்டிக்கொண்டிருக்கும் நாட்களில் நடைபெற்ற இந்த மாநாடு, பல வகைகளிலும் உலக நாடுகளால் உற்று நோக்கப்பட்டது. மாநாட்டை நடத்திய பிரான்ஸ் நாட்டின் தலைவரான அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் இதை உணர்ந்திருந்ததன் விளைவாகவே இந்த மாநாட்டுக்குக் கூடுதல் வண்ணம் சேர்க்க முயன்றார். இந்த மாநாட்டுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரீஃபை அழைக்க அவர் விரும்பினார். அமைப்பின் பிற உறுப்பினர்கள் அந்த முடிவை நிராகரித்தனர். அதேபோல, ரஷ்யாவை மீண்டும் இந்த அமைப்புக்கு அழைக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்பினார். அமேசான் காட்டுத் தீ தொடர்பாக விவாதிக்கப்பட்டதை பிரேசில் அதிபர் ஜைர் பல்சானாரோ விரும்பவில்லை; மெக்ரானுக்கும் பல்சானாரோவுக்கும் இடையே வாக்குவாதம்கூட ஏற்பட்டது. ஆக, அமைப்பின் 44 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், இறுதியாகக் கூட்டறிக்கைகூட வெளியிடப்படாமல் முடிந்தது மாநாடு. தொடர்ந்து பருவநிலை மாறுபாடுகள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் பேசிவந்தாலும், அதில் எந்த அளவுக்கு வளர்ந்த நாடுகளுக்கு அக்கறை இருக்கிறது என்பதையே இந்த மாநாட்டின் போக்கு வெளிப்படுத்துகிறது.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரதமர் மோடி, பருவநிலை பாதுகாப்புக்கான இந்தியாவின் நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதைத் தாண்டி, இந்த மாநாட்டை இன்னொரு விஷயத்துக்கும் சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டார். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற முனையும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மேலும் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுவிட்டு வந்தார். “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயார்” என்று சமீபத்தில் கூறியிருந்த ட்ரம்ப்புக்கு இந்த விவகாரத்தில் இந்தியத் தரப்பின் நியாயத்தை வலுவாகவே உணர்த்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் தேக்க நிலையை எட்டிவிட்ட இருதரப்பு வர்த்தகம் தொடர்பாகவும் ட்ரம்பும் மோடியும் ஆலோசனை கலந்தனர். பன்னாட்டு அமைப்புகளில் விவாதித்துச் செய்யப்படும் முடிவுகளைவிட இருதரப்புப் பேச்சுகளில் ஏற்படும் முடிவு கூடுதல் பயன் தருவதாக இருப்பதை இந்த மாநாட்டு அனுபவம் இந்தியாவுக்கு மேலும் உணர்த்துவதாக அமைந்தது. இந்திய அளவில் இந்த மாநாடு பயன்பட்டது என்ற அளவில் நாம் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், மாநாட்டின் பிரதான நோக்கத்தில் காட்டப்பட்ட அக்கறை மிகுந்த வருத்தத்தையே தருகிறது.

பிரதமரின் முனைப்புG7 countriesHeadlinesபருவநிலை மாறுதல்மின்னணு தொழில்நுட்பப் பயன்பாடுதலையங்கம்இந்து தமிழ் தலையங்கம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author