

இந்தியா எத்தனையோ ஊழல்களைக் கண்டிருந்தாலும், மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள ‘வியாபம்’ ஊழல் தனி ரகமாகத்தான் இருக்கிறது. ‘வியாபம்’ என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு. இந்த அமைப்பில், அரசியல் செல்வாக்கும் பண பலமும் அதிகார துஷ்பிரயோகங்களும் புகுந்து ஆடிய ஆட்டத்தின் விளைவு, இன்றைக்கு அங்கு ஆளும் பாஜக அரசுக்குப் பெரும் தலைக்குனிவை உருவாக்கியிருக்கிறது.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பலர் மீது இந்த ஊழலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பதவி நிலை, சேர விரும்பும் மருத்துவப் படிப்பு போன்றவற்றைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 1.47 லட்சம் பேர் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. போலிக் கையெழுத்து, போலி ஆவணம் தயாரிப்பு போன்ற குற்றங்கள் ஆயிரக் கணக்கில் நடந்திருக்கின்றன. தேர்வர்களுக்கான படிவத்தில், தேர்வரின் பெயர், வயது, முகவரி, அங்க அடையாளங்களைச் சரியாக எழுதிவிட்டு, புகைப்படம் ஒட்டும் இடத்தில், தேர்வு எழுத அமர்த்தப்படும் போலி நபரின் புகைப்படத்தை மாற்றி ஒட்டுவது, தங்களுக்குப் பணம் தரும் தேர்வர்களை மட்டும் தனியிடத்தில் அமரவைத்து, விடைகள் அடங்கிய தொகுப்பைக் கொடுத்து எழுதவைத்துத் தேர்ச்சி அடையவைப்பது, தேர்வர்களிடம் வெற்றுத்தாள்களை வாங்கிக்கொண்டு, சரியான விடைகள் எழுதப்பட்ட தாள்களை இணைத்துவிடுவது என்று பல வகை மோசடி வழிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
இதுவரை சுமார் 2,000 பேர் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஊழல் கும்பல்களை அணுகிய அப்பாவி மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள். ஊழலின் மையப் புள்ளிகள் இதுவரை சிக்கவில்லை. மாறாக, நாடே அதிரும் வகையில், இந்த ஊழல் குற்றச்சாட்டோடு தொடர்புடையவர்களில் 45 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர், ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் உட்பட. இந்தப் பட்டியலின் சமீபத்திய சேர்க்கைகள், செய்தியாளர் அக் ஷய் சிங், ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியின் முதன்மையர் அருண் சர்மா; இருவருமே வெவ்வேறு விதங்களில் இதை விசாரித்துவந்தவர்கள். மத்திய பிரதேச அரசு இந்த மர்ம மரணங்கள் யாவும் ‘இயற்கையான மரணங்கள்’ என்றே கூறுகிறது.
ஊழலுக்கு எதிரானவர் என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த மோடி, ஊழல் / அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் தன் கட்சியினர் சிக்கும் தருணங்களிலெல்லாம் மவுன சாமியாராகிவிடுவது விசித்திரம். மோடி இரு வகைகளில் இங்கு பொறுப்புக்குரியவராகிறார். ஒன்று, அவர் பிரதமர். இன்னொன்று, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கட்சியைத் தன் பிடியில் வைத்திருப்பவர். ஆளும் அரசு ஆத்ம சுத்தியோடு இந்த ஊழலை அணுகாத சூழலில், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், இன்னும் எத்தனை ‘இயற்கை மரண’ங்களுக்காக அது காத்திருக்கிறது என்பதுதான் தெரியவில்லை!