

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்துவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தது மற்றும் மாநிலப் பிரிவினை தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆராய, ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வை நிறுவியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆகஸ்ட் 5 முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்ப்பில்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதோ என்ற அச்சத்துக்கு விடை அளிக்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கவும், அதன் வளர்ச்சிக்கான வேலைகளைச் செய்யவும் நிர்வாக ரீதியிலான உத்தரவுகள் மூலம் மக்களுடைய அடிப்படை உரிமைகளைக்கூடக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் ‘ஆட்கொணர்வு மனு’க்கள் (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல்செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களின் கைது சட்டப்படியாக செல்லத்தக்கதா என்று நீதிமன்றம் இன்னமும் ஆராயவில்லை. கைதானவர் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறார், எந்தச் சட்டப்படி கைதுசெய்தனர் என்றெல்லாம் பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது ‘ஆட்கொணர்வு மனு’க்களை விசாரிப்பதையே நீதிமன்றம் நிறுத்தி வைத்ததைச் சிலர் இப்போது ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி 1954-ல் குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, ஆகஸ்ட் 5-ல் இப்போதைய குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துப் பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ளன. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது, ‘ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று’ முந்தைய உத்தரவை ரத்துசெய்தது, தன்னுடைய செயலுக்குத் தானே ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதைப் போல இருக்கிறது என்பதே ஆட்சேபம். அரசியல் சட்டத்தின் 370-வது கூறில் உள்ள ‘அரசியல் சட்ட நிர்ணய சபை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘சட்டமன்றம்’ என்ற வார்த்தையைப் புகுத்தி, அடுத்த நடவடிக்கையை எடுத்திருப்பதையும் மனுக்கள் ஆட்சேபிக்கின்றன. ஒரு கூட்டாட்சி அமைப்பில், மாநிலமாக இருக்கும் ஒரு பிரதேசத்தை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அந்தஸ்தைக் குறைக்கலாமா, இதற்கு முன்னுதாரணமே இருந்ததில்லையே என்பது இதில் முக்கியமான கேள்வி. மக்களுடைய பங்கேற்போ ஒப்புதலோ இல்லாமல் ஒரு மாநிலத்தின் அந்தஸ்தைப் பிற மாநிலங்கள் சேர்ந்து எடுப்பது அரசமைப்புச் சட்டப்படியே தார்மீகமானதா என்ற கேள்வியையும் நீதிமன்றத்தால் புறக்கணித்துவிட முடியாது.
அரசமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தைக் காக்கும் வகையில் தீர்ப்பை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பானது எதிர்கால ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின் மீது மிகுந்த தாக்கம் செலுத்தும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பது நிச்சயம்.