பொருளாதார ஊக்கத்துக்கு ரிசர்வ் வங்கியின் உபரி பயன்படட்டும்

பொருளாதார ஊக்கத்துக்கு ரிசர்வ் வங்கியின் உபரி பயன்படட்டும்
Updated on
1 min read

நீண்ட இழுபறிக்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து ரூ.1,76,051 கோடியைப் பெறவிருக்கிறது இந்திய அரசு. விதைநெல்லைப் போன்ற தொகை இது. அவசரத் தேவைக்காக ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாகச் சேர்த்து வைத்த தொகையிலிருந்து பெறப்படும் ரூ.52,637 கோடியும் இதில் அடங்கும். ரிசர்வ் வங்கிக்கான மூலதனச் சட்டகத்தைப் பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட விமல் ஜலான் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில், இந்தத் தொகை ரிசர்வ் வங்கியிடமிருந்து தரப்படுகிறது.

2018 ஜூன் 30 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் ரொக்கம், தங்கம் போன்றவற்றின் மறு மதிப்பீட்டுக் கையிருப்புக் கணக்கில் மொத்தம் ரூ.6.91 லட்சம் கோடி இருக்கிறது. இந்தத் தொகை, கையிருப்பில் உள்ள வெளிநாட்டு ரொக்கம் மற்றும் தங்கம்-வெள்ளி ஆகியவற்றுக்குச் சந்தையில் என்ன மதிப்பு என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த ரொக்கமும் தங்கம் உள்ளிட்டவையும் விற்கப்படுவதில்லை என்பதால், அரசுக்கு அவை பணமாகத் தரப்படுவதில்லை. அவசரத் தேவைக்கான நிதிக் கையிருப்பு இதே காலத்தில் ரூ.2.32 லட்சம் கோடியாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள மொத்த உடமைகளில் இந்த நிதியளவு 6.5% - 5.5% வரையில் இருப்பது அவசியம் என்று விமல் ஜலான் குழு வலியுறுத்தியுள்ளது. இதில் எவ்வளவு இருந்தால் தனக்கு வசதியாக இருக்கும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு, உபரியை அரசுக்குத் தருவது ரிசர்வ் வங்கியின் முடிவுக்கே விடப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை நிர்வாகக் குழுவானது, 5.5% தொகையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, ரூ.52,637 கோடியை அரசிடம் தந்துவிடுவது என்று முடிவெடுத்தது. பிற வகைக் கையிருப்புகளில் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த மறுமதிப்புக் கையிருப்பைக் கொண்டு அதை ஈடுசெய்யக் கூடாது என்றும் நிர்வாகக் குழு கூறியிருக்கிறது.

இந்திய அரசுக்கு இறையாண்மை உரிமையுள்ளதால், தனக்குக் கட்டுப்பட்ட ரிசர்வ் வங்கியின் உபரியைத் தன்னிடம் தருமாறு கேட்டு வாங்குவதில் தவறேதும் இல்லை என்று சிலர் வாதிடக்கூடும். அரசு அப்படிக் கேட்டும் வாங்கிக்கொண்டுவிட்டது. ஆனால், இந்த உபரியானது ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி தனக்குக் கிடைத்த வருவாயிலிருந்து சேர்த்தது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டில் தனது செலவை ஈடுகட்டும் வகையில் வருவாயைத் திரட்ட முடியவில்லை என்பதால், அரசு இப்படி உபரியைக் கேட்டுப் பெறுவது தார்மீக அடிப்படையில் ஏற்க முடியாதது; துரதிர்ஷ்டவசமானது. இந்தத் தொகையை எப்படிக் கவனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துகிறது என்பதும், அதன் விளைவுகளுமே இன்றைய முடிவைப் பிற்பாடு நியாயப்படுத்தக்கூடிய ஒரே சாத்தியம். சுணங்கும் பொருளாதாரத்தை உந்தித்தள்ளுவதற்கும் பொருளாதார மீட்சிக்கும் இத்தொகை அரசுக்கு உதவட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in