Published : 21 Jul 2015 09:02 AM
Last Updated : 21 Jul 2015 09:02 AM

இழப்பீடுகளின் இடைவெளி!

மெக்சிகோ வளைகுடாவில் 2010-ல் ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடாக ரூ.1,15,810 கோடி இழப்பீடு தருவதற்கு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொண்டுள்ளது பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம். இதைப் படிக்கும்போது, ‘போபாலில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, இதுபோன்ற இழப்பீடு நமக்குக் கிடைக்கவில்லையே’ என்ற கோபமும் வேதனையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பெரும்பாலான ஆலை விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், ஆலை விபத்துகளுக்கான காரணங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பற்றதனமும் அலட்சியமுமே முக்கியமான காரணங்கள் என்பதுதான். இப்படியான விபத்துகளுக்குக் காரணமான நிறுவனங்களை அந்த விபத்துகளுக்குப் பொறுப்பாக்குவதும் உயிரிழப்பு, காயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு இழப்பீடு பெறுவதும் அடிப்படை நியாயங்களில் ஒன்று. ஏனென்றால், யார் ஒரு ஆலை இயங்க இடம் அளிக்கிறார்களோ அவர்களே விபத்துகளால் முதலில் பாதிக்கப்படுகிறார்கள். ஆக, மக்களுக்குத் துணையாகச் சட்டங்களை வகுப்பதும் சட்டரீதியாக நிறுவனங்களுடன் போராடி நியாயத்தைப் பெறுவதும் ஒரு அரசின் கடமை ஆகிறது.

மெக்சிகோ வளைகுடா விபத்தில், அமெரிக்க அரசு இதைச் சாதித்திருக்கிறது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், கடல் பரப்பில் லட்சக்கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கொட்டியதால் பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஐந்து மாநில அரசுகளும் மத்திய அரசும் கூட்டாகக் களம் இறங்கி, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துக்கு எதிரான வழக்கைத் தீவிரமாக நடத்தி, இறுதியில் இந்த இழப்பீட்டைப் பெற்றுத்தந்திருக்கின்றன.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில், ‘யூனியன் கார்பைடு நிறுவன’த்தில் 1984-ல் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு விபத்தில், உடனடியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே 10,000-ஐத் தாண்டும். இன்னும் தொடர் பாதிப்புகளால் நோய்வாய்ப்பட்டு மாண்டவர்கள், உடல் - மனச்சிதைவுக்கு ஆளானவர்கள், தலைமுறைகளைத் தாண்டி ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கானோரின் பாதிப்புகளைப் பட்டியலிடுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். விபத்து நடந்த உடனேயே போபாலுக்கு ஆலையைப் பார்வையிட வந்த ‘யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் கைதுசெய்யப்படவில்லை. மாறாக, போலீஸ் காவலுடன் பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்குத் திரும்ப வழி வகுக்கப்பட்டது. அங்கு தொடங்கிய நம்முடைய அரசின் துரோகம், வெறும் ரூ. 470 கோடி இழப்பீட்டுடன் கதையை முடித்துக்கொண்டதில் முடிந்தது. இன்னமும் விபத்து நடந்த ஆலையிலிருந்து 350 டன்கள் எடையுள்ள விஷ ரசாயனம் அகற்றப்படாமலேயே இருக்கிறது, ஒரு எச்சரிக்கைச் சின்னம்போல!

போபால் விபத்துக்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஒன்றுமே இல்லை என்பதற்கு நம்முடைய அணுசக்தி ஒப்பந்தங்கள் சான்று. நம்முடைய இன்றைய அரசியல்வாதிகளுக்கு அமெரிக்காதான் எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம். ஒரு விபத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழலில், அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது, ஒரு விபத்துக்கான இழப்பீட்டைப் பெற வேண்டிய சூழலில் அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். 11 உயிர்களுக்கு அமெரிக்க அரசு கேட்கும் இழப்பீட்டுக்கும் 11,000 + உயிர்களுக்கு இந்திய அரசு கேட்ட இழப்பீட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அவர்கள் உணர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x