ஆணாதிக்க மனோபாவத்துக்கு முடிவுகட்டுவோம்

ஆணாதிக்க மனோபாவத்துக்கு முடிவுகட்டுவோம்
Updated on
2 min read

நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினரான ஆஸம் கான், பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது கடுமையான கண்டனத்துக்குரியது. கடந்த ஜூலை 25 அன்று முத்தலாக் மசோதா நிறைவேறியபோது, இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றக் கூடாது, ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் குரலெழுப்பியபோதுதான், ஆஸம் கான் இப்படி மோசமாக நடந்துகொண்டார்.

இதனால், அன்று முத்தலாக் விஷயம் ஓரங்கட்டப்பட்டு ஆஸம் கானின் செயலே விவாதத்துக்கு உள்ளானது. அன்றைய தினம் அவைத் தலைவராக இருந்த ரமா தேவிக்கு எதிராகத்தான் தரக்குறைவான வார்த்தைகளை ஆஸம் கான் பயன்படுத்தினார் என்பது மேலும் அதிர்ச்சியளிப்பது. சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் குறுக்கீட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவரைப் பார்த்து ‘இப்படியும் அப்படியும் திசைதிருப்ப வேண்டாம்’ என்று ஒரு பாடல் வரியை மேற்கோள் காட்டினார்.

இடையே குறுக்கிட்டு, தன்னை நோக்கிப் பேசும்படி ரமா தேவி கேட்டுக்கொண்டபோதுதான் தரக்குறைவான வார்த்தைகளை ஆஸம் கான் பயன்படுத்தியிருக்கிறார். பெண்கள் தொடர்பான மசோதா ஒன்றுக்கான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது இப்படி நிகழ்ந்ததுதான் இதில் கொடுமை. ‘இது ஆண்கள் உட்பட எல்லா உறுப்பினர்களின் மீதும் விழுந்த கறை’ என்று ஆஸம் கானின் பேச்சைக் குறிப்பிட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டார். ஆஸம் கான் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி என்றாலும் தற்போதுதான் முதன்முறையாக மக்களவை உறுப்பினராகி இருக்கிறார்.

சர்ச்சைகளுக்கு அவர் புதியவரல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதாவைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்காகப் பிரச்சாரம் செய்வதற்கு 72 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டவர். ஆஸம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கோரும் அதே நேரத்தில், சில பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கான குரலை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். இதுவும் நியாயமானதே.
தற்போது அமைந்துள்ள 17-வது மக்களவைதான் இதுவரையிலான மக்களவைகளில் அதிகபட்ச அளவாக 78 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்றாலும், மக்களவையின் மொத்த எண்ணிக்கையில் இது வெறும் 14.39%-தான்.

முதலாவது மக்களவையில் 5% பிரதிநிதித்துவத்துடன் தொடங்கிய பெண்களின் பங்கேற்பு, 70 ஆண்டுகளில் இந்த நிலைமையை வந்தடைந்திருக்கிறது. உலக அளவில் மக்களவைகளின் பெண் உறுப்பினர்களின் சராசரி 24.6%. வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில்கூட நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. இந்தியாவில், பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா அல்லது 108-வது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவதற்காக 2010 மார்ச்சில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், மக்களவையில் எதிர்ப்புகளைத் தாண்டி அந்தச் சட்டம் நிறைவேற முடியாமல் போனதால், கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இந்தச் சட்டம் தடுக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்களை அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்த இடஒதுக்கீடு கொண்டுவந்தால் செல்வாக்கு மிக்கவர்கள் தங்களுக்கு வேண்டிய பெண்களைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெறச் செய்து, அவர்களைக் கைப்பாவைகளாக வைத்திருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த விமர்சனம் ஆண்களுக்கும் பொருந்தக்கூடியதே. 542-க்கு 303 என்று அறுதிப் பெரும்பான்மை கொண்ட பாஜக, மாநிலங்களவையிலும் வலுவான நிலையில் இருக்கும் சூழலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற சட்டங்களெல்லாம் நிறைவேற்றப்படும் காலக்கட்டத்தில் வரலாற்றுத் தேவையை வலியுறுத்தும் மசோதா இது.

பாலினப் பாகுபாடுகளுக்கு எதிராக அரசியல் கட்சிகளெல்லாம் குரல் கொடுக்கவில்லை என்றால், ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம்’ என்பதெல்லாம் பொருளற்ற முழக்கங்களாக எஞ்சிவிடும். ஆணாதிக்க மனோபாவத்தை மாற்ற வேண்டுமெனில், முடிவெடுக்கும் இடங்களிலெல்லாம் பெண்களுக்குக் கூடுதலான அரசியல் அதிகாரப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அதற்கு நாடாளுமன்றம் வழிகாட்ட வேண்டும். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in