

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைக் கற்றுத்தராத மதறஸா, வேத பாடசாலைகளுக்கு அரசு அங்கீகாரத்தை ரத்து செய்துவிடுவது என்ற மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சரின் எச்சரிக்கை எதிர்பார்த்தபடியே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி ஒருவேளை தடை செய்தால் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பாதிக்கும். அரசின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் கல்வி நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த பாடத்திட்டத்தை ஏற்காமலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைக் கற்றுத்தராமலும் இருந்தால், அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் படித்திருந்தாலும் அவர்கள் பள்ளியில் சேராத மாணவர்களாகவே கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏழை முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த மதறஸாக்களில்தான் படிக்கின்றனர். சமூகம் சார்ந்த இந்தப் பள்ளிக்கூடங்களில்தான் அவர்களுக்கு மதக் கல்வி இலவசமாகக் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் இந்தக் கல்வியை நவீனப்படுத்துவது அவசியம். மதம் சார்ந்த கல்வியுடன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான இதர பாடங்களையும் அவர்கள் சேர்த்துப்படிப்பதற்கு வழி செய்ய வேண்டியது அவசியம்.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் 1,889 மதறஸா பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் 559 பள்ளிக்கூடங்களில் அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவை மாநில அரசின் உதவியுடன் கற்றுத்தரப்படுகின்றன. முஸ்லிம்களிலேயே வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்து மதறஸாக்கள் நடைபெறுகின்றன. அவரவர் பிரிவுகளுக்கேற்ப அவற்றிலும் சிறிதளவு மாறுதல்கள் இருக்கின்றன. தேவ்பந்த் பிரிவைச் சேர்ந்த மதறஸாக்கள் நவீனக் கல்வியைக் கற்றுத்தர முடியாது என்று கூறிவிட்டன. ஆனால் பிற மதறஸாக்கள் அந்த யோசனைகளை வரவேற்றுச் செயல்படுத்திவருகின்றன.
இந்தியாவில் இப்போது கல்வித்துறையில் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்துவருகின்றன. இதையொட்டி முஸ்லிம் மாணவர்களைத் தயார் செய்வது அவர்களுக்கு நன்மையையே தரும். ஆனால், இதைச் செய்ய அரசு மேற்கொள்ள வேண்டிய வழிமுறை வேறு. உதாரணமாக, முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவையே இதற்கென நியமித்து, சமகால கல்விச் சூழலுக்கேற்ற மாற்றங்களைப் பரிந்துரைக்கச் சொல்லலாம். மேலும், மதறஸாக்கள் இதில் நல்ல முடிவெடுக்க மேலும் அவகாசம் அளிக்கப்படலாம். முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள், குழந்தைகளின் பெற்றோர், மதறஸாக்களின் நிர்வாகிகள் என்ற முத்தரப்பும் கூடிப் பேசி இதைச் சுமுகமாக ஏற்று அமல்படுத்தும்போது இந்த முயற்சிக்கு அமோக வெற்றியும் கிடைப்பது நிச்சயம். இதைவிடுத்து அரசு மட்டுமே ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதும், ஏற்காவிட்டால் அங்கீகாரம் கிடைக்காது என்று மிரட்டுவதும் எதிர்மறையான பலன்களையே தரும். இந்தியச் சமுதாயத்தில் முஸ்லிம்கள் பிரிக்க முடியாத ஓர் அங்கம். மேலும், கால ஓட்டத்தின் எல்லா மாற்றங்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய வல்லமை, ஏனைய இந்தியச் சமூகங்களைப் போலவே இந்திய முஸ்லிம் சமூகத்துக்கும் உண்டு. மிரட்டல்களாலும் உத்தரவுகளாலும் அவர்களை அணுக வேண்டிய தேவையே இல்லை. பாஜக அரசு தனது மக்களிடம் பேச முற்படும் முன், தனது மொழியை எல்லோருக்குமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.