

தேசத் துரோக வழக்கின் கீழ் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்குச் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டது, காலனியக் காலக் கொடுங்கோன்மையான இத்தகைய சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்ற கருத்துக்குப் புத்துயிர் அளிப்பதாக அமைந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வைகோ பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் ஆற்றிய உணர்ச்சி மிகுந்த உரைதான் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதற்குக் காரணம். தேசத் துரோகத்தைக் குற்றமாகக் கருதும் சட்டப் பிரிவு 124-ஏ அடிப்படையில் மூன்றாண்டு தண்டனையோ ஆயுள் தண்டனையோ வழங்கப்படுவது வழக்கம். வைகோ விவகாரத்தில் அந்தச் சட்டப் பிரிவுக்குரிய தண்டனைக்குக் குறைவாக வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், அரசியல் பேச்சுக்களெல்லாம் அரசுக்கு எதிரானவையாகக் கருதப்பட்டு தண்டனை விதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இந்திய ஜனநாயகத்தின் கேடான பக்கங்களில் ஒன்று இச்சட்டம்.
அரசு மீது விசுவாசமோ பிரியமோ காட்டாவிட்டால் கருத்துரிமையைக் கட்டுப்படுத்துவது என்பதை ஜனநாயகம் ஏற்பதில்லை. இந்தியாவில் 1870-ல் பிரிட்டிஷ் அரசுதான் தன்னை விமர்சித்துப் பேசுவதையும் எழுதுவதையும் தடுக்கும் வகையில் தேசத் துரோகம் தொடர்பான இந்த சட்டப் பிரிவைக் கொண்டுவந்தது. தேசப் பிதா காந்தி தொடங்கி இச்சட்டப் பிரிவால் எவ்வளவோ மேன்மையான மனிதர்கள் கடந்த காலங்களில் பதம் பார்க்கப்பட்டிருக்கின்றனர். பிற்காலத்தில் இத்தகைய கருப்புச் சட்டங்கள் கூடாது என்றெண்ணிய பிரிட்டனே தன்னுடைய நாட்டில் இச்சட்டத்தை நீக்கிவிட்டது. ஆனால், இந்தியா இன்னும் சுமந்துகொண்டிருக்கிறது.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு துரோகமிழைத்துவிட்டது என்றும் அங்கே ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் கடுமையான வார்த்தைகளில் அரசை வைகோ வசைபாடியது உண்மைதான். எனினும் அவரது கடுமையான வார்த்தைகள் எந்த விதத்தில் தேசத்துக்குத் துரோகம் விளைவிப்பதாக மாறியது என்று அரசுதான் விளக்க வேண்டும். ஈழப் போரில் இலங்கை ராணுவத்துடன் காங்கிரஸ் அரசு கைகோத்துக்கொண்டதாகக் கூறும் புத்தகமொன்றின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டின்போதுதான் வைகோ அப்படிப் பேசியிருக்கிறார். வைகோவின் விமர்சனங்கள் அரசுக்கு எதிராக அவநம்பிக்கையையும் வெறுப்பையும் விதைக்கக்கூடியவை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இங்குதான் பிரிவு 124-ஏ-வின் விஷமம் இருக்கிறது. “அரசுக்கு எதிராக அவநம்பிக்கையை விதைக்கும் எந்த ஒன்றும் அல்லது அரசு மீதான வெறுப்பு அவமதிப்பு” என்பதெல்லாம் மிகவும் விரிவான வரையறைகள். இதெல்லாம் ஆயுதம் தாங்கியவர்களை மட்டுமல்ல; தீங்கற்ற விமர்சனங்களைக்கூட உள்ளடக்கும். நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டுதல் போன்ற செயல்களை மட்டுமே தனது வரையறைக்குள் கொண்டுவருவதாக 1962-ல் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், நடந்துகொண்டிருப்பது என்ன?
ஜனநாயகக் குரல்களின் குரல்வளை நெரிபடாமலிருக்க வேண்டும் என்றால், பிரிவு 124-ஏ-வை நீக்குவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.