நம்பிக்கை தரும் தீர்ப்புகள்

நம்பிக்கை தரும் தீர்ப்புகள்
Updated on
2 min read

சிகிச்சையின்போது காட்டப்படும் அலட்சியத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, இந்த வாரம் வெளியாகியிருக்கும் இரண்டு தீர்ப்புகள் பெரும் நம்பிக்கை அளித்திருக்கின்றன. இரண்டு சம்பவங்களும் தமிழகத்தில் நடந்தவை; அரசு மருத்துவமனைகள் தொடர்பானவை. கடந்த ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துகொண்டவர்களில் 16 பேருக்கு மஞ்சள் காமாலை நோய்த்தொற்று ஏற்பட்டு, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக தலா ரூ. 3 லட்சம் தருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில், 18 ஆண்டுகளுக்கு முன்னர் குறை மாதத்தில் பிறந்த பெண் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் முன்னர், விழித்திரைச் சோதனை செய்யாமல் விட்டதால் அக்குழந்தைக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் மீது வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் வழங்க தேசிய நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இரண்டு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றம், அப்பெண்ணுக்கு ரூ. 1.8 கோடி இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

ஸ்டான்லி மருத்துவமனையில், டயாலிசிஸ் செய்யும் கருவியைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் பலருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருப் பதாகத் தெரியவருகிறது. இதனால் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக் கிறது. நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர்தான் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்ற தகவல் கவலை தருகிறது.

எழும்பூர் அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்குச் செய்ய வேண்டிய அடிப்படை சோதனை செய்யப்படவில்லை. மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணிக்கு அமர்த்தி, அவர்களுடைய பணிச்சுமை யைக் குறைத்தால் இவை போன்ற சம்பவங்களுக்கு இடமே இருக்காது. ஏதோ அரசு மருத்துவமனைகளில்தான் இந்த நிலைமை என்றில்லை. அரசு மருத்துவமனையில் நடந்ததால், பரவலான வெளிச்சத்துக்கு இந்தச் சம்பவங்கள் வந்திருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. திருச்சியைச் சேர்ந்த தனியார் மருத்துவ மனை ஒன்றில் கண் சிகிச்சை முகாமுக்குச் சென்று பார்வையைப் பறிகொடுத்த ஏழைகளின் பரிதாபக் கதை இன்னும் எவர் நெஞ்சத்தை யும் விட்டு அகன்றிருக்காது. ஆக மொத்தத்தில், இந்த விவகாரம் அரசு மருத்துவமனை - தனியார் மருத்துவமனை இடையேயான வேறுபாடு தொடர்பானது அல்ல. மாறாக, நம்முடைய மருத்துவத் துறையில் புரையோடும் வணிக, அலட்சிய கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

மருந்து ஒவ்வாமையால் ஏற்பட்ட தோல் அரிப்பால் பாதிக்கப்பட்ட அனுராதா சாஹா எனும் இளம் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். அவரது கணவர் குணால் தொடர்ந்த வழக்கில், ரூ. 11 கோடியை இழப்பீடாக வழங்க கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். இந்தியாவில் மருத்துவ அலட்சியத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகை அது. அதைத் தொடர்ந்து வந்திருக்கும் இப்படியான அதிரடித் தீர்ப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகுக்கும். புரையோடும் மருத்துவத் துறைக்கும் இது சிகிச்சை அளிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in